கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டனர். இதில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் 78 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார்.
ஆனால், தமிழகத்தில் 38 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டும் கூட தேனி தொகுதியில் மட்டும் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றார். அதன்மூலம் பாராளுமன்றத்திற்குள் கால் வைத்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தொடர்ந்து பிரதமர் மோடி அரசுக்கு ஆதரவாகவும் தொகுதி மக்களின் குறைகளையும் பாராளுமன்றத்தில் கோரிக்கையாக வைத்து வருகிறார்.
இந்த நிலையில் தான் தேனி பாராளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத் குமார் தனது சொந்த ஊரான தேனிக்கு வருவதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்பொழுது பத்திரிக்கையாளர்கள் சில கேள்விகளை ரவீந்திரநாத் குமாரிடம் முன்வைத்தனர்.
பாரதிய ஜனதா கட்சிஎந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சியினர் நிராகரிக்கிறார்களே?
என்ற கேள்விக்கு, . பிரதமர் மோடி இந்தியாவை புதிய இந்தியாவாக கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். சுதந்திர தின விழாவிற்கு பின்னர் நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் சிறப்பாக அமையும் என்றார்.
பாராளு மன்றத்திற்கு தனியாக செல்லும் தங்களை மற்ற மாநில எம்பிகள் எப்படி அணுகுகிறார்கள்? என்ற கேள்விக்கு, சக பாராளுமன்ற உறுப்பினராக தான் அணுகுகிறார்கள். நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர் என்றார்.
கடந்த பாராளுமன்ற கூட்டத்தின்போது தங்களை டி. ஆர். பாலு முதுகெலும்பற்ற பாராளுமன்ற உறுப்பினர் என்று விமர்சித்ததை எவ்வாறு எதிர் கொள்கிறீர்கள்?
என்ற கேள்விக்கு, நாட்டின் உரிமைக்காகத் தான் நான் குரல் கொடுத்தேன். எனவே இதுகுறித்து கருத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும். மேலும் இதுபோன்ற விமர்சனங்களை பெரிதாக கருத்தில் கொள்வதாக இல்லை. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு என்றும் ஆதரவாக இருப்பேன் என்று கூறினார்.