தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாகக் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இத்தகைய சூழலில் தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் கடந்த 17 ஆம் தேதி (17.05.2024) திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் (வயது 17) தனது குடும்பத்தாருடன் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அந்தச் சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். மேலும், அவர் உட்பட 5 பேர் அந்த வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டனர். அதில், 4 பேரை அங்கிருந்தவர்கள் நல்வாய்ப்பாக மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், போலீசார் ஆகியோர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான சிறுவன் அஷ்வினைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில், அருவியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிறுவன் அஸ்வின் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. உயிரிழந்த சிறுவன் அஸ்வின், நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி உயிர்நீத்த வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகள், அணை பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டிருந்தார். இதனால் குற்றாலம் அருவிகளில் கடந்த 7 நாட்களாகக் கனமழை காரணமாக குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குற்றாலம் பழைய அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று (24.04.2024) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று ஐந்தருவி பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதான அருவியில் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.