ஆகஸ்ட் 10 ஆதிக்க இந்திக்கு எதிராக 1948 ஆம் ஆண்டு மொழிப்போராட்டம் தொடங்கிய நாள் இன்று என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனார் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் "பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம்" என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில், கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக் கல்வி துறை வளாகத்தில் நடைபெற்ற பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில், அவ்வளாகத்திற்கு "பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம்" எனப் பெயர் சூட்டி, பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பள்ளிக்கல்வித் துறையின் பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 8 அடி உயரமுள்ள பேராசிரியர் க. அன்பழகன் முழு உருவச் சிலையை திறந்து வைத்து, அச்சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் அ. வெற்றியழகன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மு. மகேஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பேராசிரியர் க. அன்பழகன் சிலை திறப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆகஸ்ட் 10 ஆதிக்க இந்திக்கு எதிராக 1948 ஆம் ஆண்டு மொழிப்போராட்டம் தொடங்கிய நாள் இன்று. வரலாற்றில் இரண்டாவது மொழிப் போராட்டத் தொடக்க நாளாகவும் பதிவாகி உள்ளது. இனமானம் காக்கவும், மொழி உரிமையை நிலைநாட்டவும் எந்நாளும் உழைத்த இனமானப் பேராசிரியப் பெருந்தகையின் முழு உருவச் சிலையை சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது பெயரால் அமைந்துள்ள கல்வி வளாகத்தில் இன்று திறந்து வைத்தேன். பேராசிரியப் பெருந்தகையின் சிலை அமைக்கப் பொருத்தமான இடமும், பொருத்தமான நாளும் இதைத் தவிர வேறு இருக்க முடியாது. கல்வியில், பகுத்தறிவில், சுயமரியாதை உணர்வில் சிறந்த தமிழ்நாட்டைக் கட்டி எழுப்ப பேராசிரியப் பெருந்தகை சிலை முன்பு உறுதி ஏற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.