![Tmk, AdMK, BJP Kuetani should win the National Assembly says GK Vasan](http://image.nakkheeran.in/cdn/farfuture/qg92UG-yV5lXDctrKyZmFhrErH_i5IlQZ-2jZwE8hpM/1689481204/sites/default/files/inline-images/1000_167.jpg)
“ஒத்த கருத்துடைய கூட்டணியான தமாகா, அதிமுக, பாஜகவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் வகையில் வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் முடிவெடுக்க வேண்டும்” என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு திண்டல் அருகில் சனிக்கிழமை மாலை நடந்தது. கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது, “காமராஜரின் அரசியல் பயணம், தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது. தற்போது வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற முழக்கத்துடன், கூட்டணி கட்சிகளான பாஜக, அதிமுகவுடன் பயணிக்கிறோம். காமராஜரின் ஆட்சியில் கல்வி, தொழில், விவசாயம், சுகாதாரம் வளர்ச்சி கண்டது. காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெற்றது. இப்போது நடக்கும் ஆட்சியில் தொழில் கொள்ளை நடந்துகொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு முன்பு 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அமைச்சர்களை எளிதில் சந்திக்க முடிந்தது. அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டனர். மத்திய அரசோடு இணக்கமான செயல்பாடு இருந்தது. இப்போது நடைபெறும் திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் மற்ற மாநிலங்களுக்கு சவால் விடும் வகையில் வெற்றிபெற்று வருகின்றனர். இதனை அரசு புரிந்துகொண்டு நீட் தேர்வு குறித்து பேச வேண்டும். மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதுதான் அரசின் கடமை. மாணவர்களின் அறிவுக்கூர்மையை வளர்க்காத அரசு தேவையில்லை. மகளிர்க்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறினர். இரண்டரை ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் பாகுபாடு காட்டி, பெண்களை அவமானப்படுத்துகின்றனர். 2 கோடி பெண்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் தர முடியாவிட்டால் அரசு ராஜினாமா செய்துவிட்டு போகலாம்.
கல்வி கடன் தள்ளுபடி, மாதம் தோறும் மின் கட்டணம், சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டனர். அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பண்டிகைக்கு ரூ. 5,000 தர வேண்டும் என்ற ஸ்டாலின் இன்னும் 7 மாதத்தில் வர உள்ள பொங்கலுக்கு ரூ.5,000 தர தயாராக வேண்டும். அல்லது நாங்களே முதல் நபராக போராடுவோம். திமுகவிடம் தமிழக மக்கள் இன்னும் ஏமாறக்கூடாது. காமராஜர் பள்ளியை திறந்தார். திமுக டாஸ்மாக்கை திறக்கிறது. குற்றவாளியை நிரபராதியாக மாற்றக்கூடிய அரசாக திமுக செயல்படுவதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். காமராஜர் ஆட்சியில் நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படை தன்மை இருந்தது. தற்போது ஊழல், லஞ்சம், மோசடி, ஏமாற்றமாக உள்ளது. அப்போது நாட்டுக்கான அரசாக இருந்தது. தற்போது குடும்பத்துக்கும், அமைச்சர்களுக்குமான அரசாக உள்ளது. அப்போது மக்களாட்சி நடந்தது, தற்போது குடி மக்களுக்கான ஆட்சியாக நடக்கிறது. பொற்கால ஆட்சி நடந்தது போய், திமுகவின் டாஸ்மாக் மாடல் ஆட்சி நடக்கிறது.
காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளியை நிரபராதியாக்க செயல்படுகிறார்கள். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் நிகழ்வுகளாக நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிகளில் கூட கட்டுப்படுத்த முடியாத அளவு போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு டாஸ்மாக் தான் காரணம். டாஸ்மாக்கில் இருந்து விடுதலை கிடைத்தால் மட்டுமே, பெண்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும். எனவே வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவை அகற்ற மக்கள் உறுதி எடுக்க வேண்டும். அத்திக்கடவு- அவினாசி திட்டம் பாசனத்துக்கும், குடிநீருக்குமான திட்டம். அதை செயல்படுத்தாமல் தவிர்க்கின்றனர். முல்லைபெரியாறு பாலாறு, காவிரி ஆற்றில் நமது உரிமைகள் இழந்து வருகிறோம். கர்நாடகாவின் துணை முதல்வர், தமிழகத்துக்கு காவிரி நீர் தரமாட்டோம், காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம், என்கிறார். டெல்டா வரண்டால் தமிழகம் பாலைவனமாகும் என்பதை முதல்வர் உணரவில்லை. அரசியல், கூட்டணி காரணமாக தவறான முடிவை முதல்வர் எடுக்கிறார்.
ஒத்த கருத்துடைய கூட்டணியான தமாகா, அதிமுக, பாஜகவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி குரலை ஒலிக்க செய்ய மக்கள் முடிவெடுக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் கல்வி, தொழில், சுகாதாரம், இளைஞர்கள், மகளிர், முதியோர், கிராமங்கள், நகரம், எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர் என அனைவரும் வளர்ச்சி கண்டுள்ளனர். கரோனாவுக்கு பல நாடுகள் பொருளாதாரம் சீரழிந்து நலிவடைந்துள்ளன. ஆனால் மோடி தலைமையிலான இந்தியா பொருளாதாரத்தில் உலகில் 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. அதேநேரம் இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் என பல நாடுகள் சீரழிவை சந்தித்து மக்கள் தெருவில் நின்று போராடுகின்றனர். அந்த நாடுகளில் 5 கோடி, 10 கோடி மக்கள் தொகை மட்டுமே உள்ளது. இந்தியாவில் 140 கோடி மக்கள் தொகை உள்ளதை சிந்திக்க வேண்டும். சிறந்த வெளியுறவு கொள்கையால், ஏற்றுமதி, இறக்குமதியில் உயர்ந்து தொழில் வளர்ச்சி கண்டுள்ளது. எனவே இந்தியாவை வல்லரசாக்க தமாகா, அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி மத்தியில் அமைய தமாகாவினர் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ஈரோடு ஆறுமுகம், பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா, ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் பி.விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.பி.சண்முகம், தேர்தல் பணிக்குழு உறுப்பினர் கௌதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.