திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோயாளிகளாக 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இதுவரை 10 பேர் குணமாகியுள்ளனர். ஒருவர் வீட்டுக்கு அனுப்பபட்டார், மற்ற 9 பேர் 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இரண்டு பேர் மட்டும் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இதுக்குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, "திருவண்ணாமலை மாவட்டத்தில் 1091 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 767 நபர்களுக்கு நெகட்டிவ் என்றும், 12 பேருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. மற்றவர்களுக்கு இன்னும் முடிவுகள் வரவில்லை.
![tiruvannamalai collector press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/S7CN9lFgc8OSR0c60HUOvjSOPJWcUReN4xY_Z87UZKc/1587368034/sites/default/files/inline-images/kandhasami12456_0.jpg)
கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என நமது மாவட்டத்தில் 10 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. நமது மாவட்டத்துக்கு வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டுக்கள் மூலமாக இந்த 10 இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு முதல் கட்டமாக டெஸ்ட் எடுக்கப்படவுள்ளன. அதன் பின்னர் பரவலாக எடுக்கப்படவுள்ளன. இதில் வரும் ரிசல்ட்டை பொருத்து கரோனா டெஸ்ட் எடுக்கலாமா? வேண்டாமா? என மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். ரேபிட் கிட் மூலமான டெஸ்ட் முடிவுகள் சில நிமிட நேரங்களில் தெரிந்துவிடும். இந்த டெஸ்ட் எடுக்கப்படும் பொழுதே சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும்.
![http://onelink.to/nknapp](http://image.nakkheeran.in/cdn/farfuture/f2-6VTdahUk7PVCzbD7NULmsVnFxGOu4I_v4Ab8hcRE/1586170537/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு மருத்துவ மாவட்டங்கள் உள்ளன. திருவண்ணாமலை மருத்துவ மாவட்டம், செய்யாறு மருத்துவ மாவட்டம். இந்த இரண்டு மருத்துவ மாவட்டங்களில் திருவண்ணாமலை மருத்துவ மாவட்டத்தில் எடுக்கப்படும் ரத்தங்கள் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரிக்கும், செய்யாறு மருத்துவ மாவட்டத்தில் எடுக்கப்படும் ரத்தங்கள் சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டுக்கும் அனுப்பபடுகின்றன. இதுவரை அங்குதான் கரோனா வைரஸ் பாதித்துள்ளதா? எனப் பரிசோதனை நடைபெற்று முடிவுகள் வந்தன. இனி அந்தப் பரிசோதனை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் ஓரிரு தினங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை நமது மாவட்டத்திலேயே நடைபெறும்" என்றார்.