திருச்சி மாவட்டம், வரகனேரியைச் சேர்ந்தவர் அடைக்கலராஜ் (57). தஞ்சை சாலையில் உள்ள ஏ.ஜி. சர்ச்சில் கடந்த 20 வருடமாக பாஸ்டராக போதனை செய்துவருகிறார். இந்நிலையில் அவர், வரகனேரி வவேசு ஐயர் படிப்பகம் அருகே நின்றுகொண்டிருந்த அருண், கோபி என்ற இரு வாலிபர்களிடம் குடும்ப கஷ்டம் தீர நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன் என்று கூறி ஜெபித்துள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற வாலிபர் பாஸ்டர் அடைக்கலராஜ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் அடைக்கலராஜை 3 வாலிபர்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர். அப்போது சதீஷ் உருட்டுக்கட்டையால் அடைக்கலராஜ் மண்டையில் அடித்ததில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடைக்கலராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவுசெய்து கோபி, சதீஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.