மூன்று மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலின் தாக்குதலுக்குப் பின் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் மூன்று நாட்களுக்கு தமிழகத்திற்கு மழைவாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று காலை முதல் தற்போது வரை பெய்து வரும் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையிலும் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகை, திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியிலும் மழைப் பொழிவு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்கலைக் கழக தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன, குறிப்பாக இன்று நடக்கவிருந்த சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது., அதேபோல் சட்டக்கல்லூரி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சட்டக் கல்லூரி, சீர்மிகு சட்டக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மழை காரணமாக நாகை, புதுக்கோட்டை, திருவாரூரில் உள்ள அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளில் இன்றும், நாளையும் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.