விருதுநகரில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது, “திமுகவிலுள்ள ஆர்.எஸ்.பாரதி பேசுவது அனைத்துமே தீண்டாமைதான். வன்கொடுமை வழக்கு சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களை கடுமையாக விமர்சனம் பண்ணும் நோக்கில் ஆர்.எஸ்.பாரதி பேசியது கண்டிக்கத்தக்கது. தலைமைச் செயலகத்தில் டி.ஆர்.பாலுவும், தயாநிதி மாறனும் மனு கொடுத்துவிட்டு பேட்டி அளிக்கும்போது, தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் தயாநிதிமாறன் பேசியதும் கண்டிக்கத்தக்கது. எடப்பாடியார் ஆட்சியில் எல்லோரும் சமம் என்ற நிலையில் மக்கள் உள்ளனர். எனவே தமிழகத்தில் பிரிவினைவாதம் என்பதே கிடையாது. பாகுபாடுகளை உருவாக்கி, தீண்டாமையை உருவாக்கி, அரசியல் பண்ணும் ஒரே கட்சி திமுக தான்.
கரோனா பாதிப்பில் திமுக சார்பாக மனுக்கள் வாங்கப்பட்டது. ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலரிடம் கொடுத்தனர். 98 ஆயிரத்து 558 மனுக்கள் மட்டுமே அதில் இருந்தன. முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலமாக மனுக்கள் அனைத்தும் ஆராயப்பட்டது. அவர்கள் கொடுத்த அனைத்து மனுவிலும், சாப்பாட்டுக்கு அரிசி கொடுங்கள் என்றுதான் கேட்கப்பட்டது. மானியம் கொடுங்கள், லோன் கொடுங்கள் என்று எந்த மனுவிலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர்கள் சிறு குறு விவசாயிகள் சம்பந்தப்பட்டவை, அதை அரசாங்கம் தான் நிறைவேற்ற முடியும் என்று பொய்யாகத் தெரிவிக்கின்றனர்.
கரோனா விஷயத்தில் திமுக கபட நாடகம் ஆடுகிறது. திமுகவினர் உண்மையிலேயே நல்லவர்களாக இருந்தால் அவர்களிடம் கொடுத்த மனுக்களுக்கு, அவர்கள் அரிசி, பருப்பு வழங்கியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, அவர்கள் வாங்கிய மனுவை எங்களிடம் கொடுக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில், எங்களது அதிமுக சார்பாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் நகரத்திலும் ஒவ்வொரு பகுதியாக அதிமுகவினர் தங்களால் இயன்ற அளவிற்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை வழங்கினார்கள். 50 லாரிகளில் 10 கிலோ அரிசியை வீடு வீடாகச் சென்று கொடுத்தோம்.
திமுகவினர் ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு நாடகமாடி வருகின்றனர். உலகத் தலைவர்கள் அனைவரும் விலகி இரு, வீட்டில் இரு என்று கூறி வருகின்றனர். தமிழக முதல்வரும் அதையே சொல்லி வந்தார். ரேஷன் கடைகளில், அரிசி, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை அதிமுக அரசு இலவசமாக வழங்கியது. இப்படி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிவாரணங்களை எடப்பாடியார் அரசு வழங்கி வருகிறது.
சரியான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் இந்த ஆட்சிக்கு நல்ல ஆலோசனைகளைக் கூறி இருக்க வேண்டும். கரோனா நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்ற நோக்கில் திமுக அரசியல் செய்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.
ஆனால் முன்னாள் அமைச்சர் ஒருவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 300 பேர் உயிரிழந்ததாக பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். இப்படியெல்லாம் திமுக அரசியல்செய்ய வேண்டுமா? திமுகவினர் கொள்ளையடித்த பணத்தில் 50- க்கும் மேற்பட்ட சேனல்களை நடத்தி வருகின்றனர். ஒரு ரூபாய் செலவழித்தால், 100 ரூபாய் செலவழித்து விளம்பரம் தேடுகின்றனர். எடப்பாடியார் அரசு செய்கின்ற உதவிகள் வெளியே தெரியாத அளவிற்கு நாங்கள் செய்து வருகின்றோம்.
எடப்பாடியார் அரசு எடுத்த முயற்சியால் சென்னையில் உயிரிழப்பு கட்டுபடுத்தப்பட்டு வருகின்றது நல்ல ஒரு நிர்வாகத்தை எடப்பாடியார் அரசு வழங்கி வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற தலித் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதிருப்தியோடு அங்கு இருக்கின்றனர். நீதி அரசர்கள் குறித்து பேசும்போது நாங்கள் போட்ட பிச்சை என்று சொல்வது திமுக கட்சிக்கு அழகல்ல. திமுக இது போன்று பேசி வருவது வாடிக்கையாக உள்ளது. திமுக கரோனா நிவாரணம் அளிப்பது அனைத்தும் கபட நாடகமே. தமிழக அரசு மீது திட்டமிட்டு தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள் கருணாநிதி காலத்திலேயே, சாதி பற்றி பேசி அரசியல் செய்தவர்கள்தான் திமுகவினர். மக்களை குடிக்க பழக்கி விட்டவர் கருணாநிதி. அதை படிப்படியாக மறக்க வைக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடியார்.
எதுவும் இல்லாமல் சென்னைக்கு வந்த கலைஞரின் குடும்ப சொத்து குறித்து கணக்கு காட்ட ஸ்டாலின் தயாரா? அம்மா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது நீதிமன்ற உத்தரவு. அதை தமிழக அரசு ஏற்கும். ரஜினியும், கமலும் சினிமா முலம் பல கோடி ரசிகர்களைப் பெற்றவர்கள் அவர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் நடவடிக்கை போதுமானதாக இருப்பதால் அமைதியாக இருக்கிறார்கள்.” என்றார்.