தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்கும் பணியில் உள்ளாட்சித்துறை, பொதுசுகாதாரத்துறை தோல்வியை சந்தித்துள்ளது எனக்கூறலாம். பருவமழை தற்போது தான் தொடங்கியுள்ளது. அது அதிகரிக்கும்போது டெங்குவின் தாக்கம் அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள்.
டெங்குவை தடுப்பதற்கான, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பணியில் தமிழகரசு அவ்வளவாக ஈடுப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்தார். தற்போது அக்டோபர் 23ந்தேதி திருவண்ணாமலை நகரத்தில், முன்னால் அமைச்சரும், திமுக தெற்கு மா.செவும், திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு நகரத்தில் பொதுமக்கள் அதிகம் புழங்கும் 5 இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கினார். தொடர்ச்சியாக அங்கு வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
அதேபோல் தொகுதி முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் திமுக கிளை கழகத்தினர், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் தண்ணீர் தேங்கும் இடங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகம்முள்ள மாவட்டங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில் வேலூர் தொகுதியின் எம்.எல்.ஏவும், திமுக மாநகர செயலாளருமான கார்த்திகேயன், பல வார்டுகளுக்கு நேரில் சென்று நிலவேம்பு கசாயம் தரும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
தமிழகம் முழுவதும் திமுக எம்.எல்.ஏக்கள் பலரும் டெங்கு விழிப்புணர்வு பணியிலும், டெங்குவை கட்டுப்டுத்த வரும் முன் காப்போம் நடவடிக்கையாக காசாயம் வழங்கி வருகின்றனர்.