வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஆவடி பகுதியில் அதிகப்படியான மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 29 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 23 சென்டிமீட்டர் மழையும், அடையாறு 23.5 சென்டிமீட்டர் மழையும், கோடம்பாக்கத்தில் 21.8 சென்டிமீட்டர் மழையும், சோழிங்கநல்லூரில் 21.3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக கோவைக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களும் மறு உத்தரவு வரும் வரை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய பகுதியில் கனமழை நீடிப்பதால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மழை வெள்ள பாதிப்பு அதிமாக உள்ள தாம்பரம், வேளச்சேரி பகுதிகளுக்கு 25 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது. சென்னையில் நான்கு குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அரக்கோணத்தில் இருந்து மேலும் இரண்டு குழுக்கள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.