Skip to main content

பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேள்வி கேட்ட நிருபருக்கு மிரட்டல்

Published on 27/06/2018 | Edited on 27/06/2018
ppo

 

பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது. இது குறித்து அம்மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

’’சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து இன்று (26.06.18) திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கட்சி ,அலுலவகத்திலிருந்து கறுப்புக்கொடி பேரணி நடைபெற்றுள்ளது. இந்த பேரணியை செய்தி சேகரிக்கச் சென்ற மாத்ருபூமி தொலைக்காட்சியின் செய்தியாளர் அனுப்தாஸ், ஒளிப்பதிவாளர் முருகன்,  தீக்கதிர் நாளிதழின் செய்தியாளர் ராமதாஸ் ஆகியோர் காவல்துறையினரால் பணி செய்ய விடாமல் தடுக்கப்பட்டு, திருவண்ணாமலை கிராமிய காவல்நிலையத்திற்கு சட்டத்திற்குப் புறம்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். 

 

விசாரணை என்ற பெயரில் அவர்களை தடுத்து வைத்திருந்த காவல்துறையினர், சில மணி நேரத்திற்குப் பிறகு அனுப்தாஸ், முருகன் ஆகியோரை விடுதலை செய்துள்ளனர். தீக்கதிர் நாளிதழின் செய்தியாளர் ராமதாஸை காவல்துறையினர் இதுவரை விடுவிக்கவில்லை. 


    இதுபோன்ற, பேராட்டங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் நிகழ்வுகளில் பத்திரிகையாளர்களிடம் காவல்துறையினர் இதுபோல் அத்துமீறி நடந்துகொள்வது தொடர்கதையாகி வருகின்றது. இதுபோன்ற நிகழ்வுகளில் பத்திரிகையாளர்களிடம் அத்துமீறிவிட்டு, பிறகு தவறுதலாக நடந்துவிட்டது என்று காவல்துறை தரப்பில் கூறுவதும் வழக்கமாகியுள்ளது. நன்கு அறிந்த பத்திரிகையாளர்களை கூட, காவல்துறையினர் இதுபோல் நடத்துவதும் வழக்கமாகியுள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது. 


    இதுபோன்ற பொது நிகழ்வுகளில் செய்தியாளர்களிடம் நடந்துகொள்ளும் விதம் குறித்து, காவல்துறையினருக்கு உயர்அதிகாரிகள் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் எனவும் அத்துமீறும் காவல்துறையினர் மீது உயர் அதிகாரிகள் உடனடியாக நடவக்கை எடுக்க வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது. 


    விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ராமதாஸை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது. 


    இதேபோன்று, சென்னை விமான நிலையத்தில் இன்று (26.06.18) மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கலைஞர் தொலைகாட்சியை சேர்ந்த செய்தியாளர் ஆனந்த் அவரிடம் கேள்வி கேட்டபோது, பொன்.ராதாகிருஷ்ணன் அருகே நின்று கொண்டிருந்த பாஜகவின் செய்தி தொடர்பாளர் பிரசாத், ஆன்ந்தை மிரட்டும் வகையில், ஒருமையில் பேசியுள்ளார். "நீ யாரென்று தெரியும்" என்று ஆனந்தை நோக்கி கையை உயர்த்தி மிரட்டியுள்ளார். 
  

 கேள்வி கேட்கும் பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசுவது, அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். அதாவது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமையை பறிக்கும் செயலாகும். இந்திய அரசியல் சாசனத்தின் மீது பதவிப்பிரமாணம் செய்துகொண்ட மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தன் கண்முன் செய்தியாளர் ஒருவர் மிரட்டப்படுவதை தடுக்காமல் இருந்ததை அரசியல் சாசன அவமதிப்பாகவே கருதவேண்டும். 


    ஆகவே, செய்தியாளர்களை ஒருமையில் பேசி, மிரட்டிய பிரசாத் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிஷ்ணன் பரிந்துரைக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது. 
    மேற்கூரிய நிகழ்வுகளில் பத்திரிகையாளர்களின் உரிமை பாதுகாக்க, அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.’’

சார்ந்த செய்திகள்