
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலும், தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மக்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “நாள்தோறும் இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்தல், தாக்குதல் மற்றும் படகுகளை பறிமுதல் செய்தல் அதிகரித்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை அரசுடன் கலந்தாய்ந்து தமிழ்நாட்டு மீனவர்களை காக்கும் நிரந்தர தீர்வு காணும் நடவடிக்கைகள் எடுக்காதது ஏன் கேள்வி எழுப்பினார்.
மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? தற்போது இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள்? மீன்வளத்திற்கான கூட்டு செயற்குழுவின் 6வது கூட்டத்தில் கோரப்பட்டபடி இந்தியா மற்றும் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையே சந்திப்பை ஏற்பாடு செய்ய அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள்? மீன்வளத்திற்கான கூட்டுச் செயற்குழுவின் அடுத்த கூட்டத்திற்கான திட்டமிடப்பட்ட காலக்கெடு மற்றும் இதுவரை நடத்தப்பட்ட மீன்வளம் தொடர்பான கூட்டுச் செயற்குழுவின் கூட்டம் குறித்த விவரங்கள் மற்றும் அதற்கான வழக்கமான கூட்டங்களைத் திட்டமிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்கள் என்ன? முதலியவை குறித்து விளக்கமான பதில் அறிக்கை வெளியிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.