
கார்கள் எரிப்பு, கத்தி முனையில் பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த சேலம் மத்திய சிறை வார்டனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் அய்யம்பெருமாம்பட்டி புது ரோடு பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் மாதேஷ் (28). சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார்.
அவர் தனது கூட்டாளியான விக்கி என்கிற விக்னேஷூடன் சேர்ந்து கொண்டு 21.8.2018ம் தேதி, நரசோதிப்பட்டியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவருக்குச் சொந்தமான காரை தீயிட்டு எரித்தார். சங்கர்கணேஷின் நண்பர் டேவிட் என்பவர் மீதிருந்த முன்விரோதம் காரணமாக காரை எரித்துள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலம் சூரமங்கலம் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மாதேஷிடம் விசாரித்தபோது அவர், ஏற்கனவே 24.6.2018ம் தேதி சூரமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் சொகுசு காரையும் முன்விரோதத்தில் எரித்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றிக்கொண்டே மாதேஷ், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் ஜாமினில் வெளிய வந்த பிறகும், கூட்டாளிகள் கார்த்திக், சத்தியநாராயணா ஆகியோருடன் சேர்ந்து கொண்டு, இரும்பாலை பிரிவு ரோடு அருகே ரங்கசாமி என்பவரிடம் கத்தி முனையில் பணம் மற்றும் கைக்கடிகாரத்தை பறித்துள்ளார்.
இந்த வழக்கில் அவரை மீண்டும் கைது செய்த சூரமங்கலம் போலீசார், மாதேஷை குண்டர் சட்டத்தில் அடைக்க சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். அவருடைய உத்தரவின்பேரில் மாதேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை சார்வு செய்யப்பட்டது.