புதுச்சேரியில் சங்கராபரணி ஆறு மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் மணல் எடுப்பதற்கு தடை அமலில் உள்ளது. இந்நிலையில் தடையை மீறி அதிகாலை நேரத்தில் மர்ம கும்பல்கள் ஆற்றுப்பகுதிகளில் மணல்களை திருடி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அவ்வப்போது போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் மணல் திருட்டு ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில் மணல் திருட்டு புகார் தொடர்பாக இன்று அதிகாலை வில்லியனூர் போலீசார் திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திருட்டு மணல் எடுத்து கொண்டிருந்த வில்லியனூர், ஆரியபாளையம், திருக்காஞ்சி, மங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 31 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் திருட்டு மணல் எடுக்க பயன்படுத்தபட்ட 23 மாட்டுவண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் கைது செய்யப்படுவது இதே முதல் முறையாகும்.