!['' Those who take Hindutva in their hands have lost their jobs '' - Minister Sekarbabu interview!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Fw2i-FsW1sHeyapj_OlP7VRb5rafLJr5txiURfKp8yo/1629174269/sites/default/files/inline-images/st-6.jpg)
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம் அர்ச்சகர் பயிற்சி முடித்த 54 பேருக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 14 ஆம் தேதி பணி நியமன ஆணையை வழங்கினார்.
சென்னை ஆர்.டி.எம்.புரத்தில் கடந்த 14 ஆம் தேதி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அர்ச்சகர் பயிற்சி முடித்த 24 பேர் உட்பட 58 பேருக்கு, பணி நியமன ஆணையைத் தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.
!['' Those who take Hindutva in their hands have lost their jobs '' - Minister Sekarbabu interview!](http://image.nakkheeran.in/cdn/farfuture/K-A1BkDoDybj73LyBPP4j2n8LrnO6A95OSEzbJ4DmEE/1629174502/sites/default/files/inline-images/reyryry_0.jpg)
இந்நிலையில் சென்னையில் இன்று, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் குறித்து தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்பொழுது பேசிய அவர், ''முறையாகப் பயிற்சிபெற்ற 58 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 58 அர்ச்சகர்கள் நியமனம் குறித்து சிலர் அவதூறாக தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சில ஊடகங்களும், ஒரு சில முகநூல் நண்பர்களும் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கி, ஏதோ அர்ச்சகர்களுக்கு எதிரான அரசுபோல் சித்தரிக்க நினைக்கிறார்கள். பதவியேற்ற இந்த மூன்று மாதங்களில் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்ததை அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்துசமய அறநிலையத்துறையைப் பொறுத்தவரையில் இந்துக்கள், இந்துத்துவா என்பதைக் கையில் எடுப்பவர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது என்ற காரணத்திற்காக இப்பொழுது அர்ச்சகர் நியமனப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறார்கள். யாரையும் கோவிலில் இருந்து வெளியேற்றும் எண்ணம் இல்லை. கோவில்களில் ஏற்கனவே பணியிலுள்ள அர்ச்சகர்கள் யாரும் பணியிலிருந்து நீக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த நியமனமும் இல்லாமல் சிதிலமடைந்து கிடந்த இந்துசமய அறநிலையத்துறைக்கு முதல்வர் கொடுக்கும் சீர்திருத்தங்களுக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து வலுசேர்க்க வேண்டும்'' என்றார்.