Skip to main content

கிராமங்களிலும் வீடுகளுக்கே சென்று சிலிண்டர் டெலிவரி... இல்லையேல் அங்கீகாரம் ரத்து...

Published on 19/04/2020 | Edited on 20/04/2020

 

இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் பெட்ரோல் பங்க்குகள், கேஸ் ஏஜென்சிகள் இயங்க எந்தத் தடையும் கிடையாது. அவைகள் சமூக இடைவெளியுடன் இயங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. அதன்படி இவைகள் இயங்கி வருகின்றன. ஊரடங்குக்கு முன்பு கேஸ் வேண்டும் என்பவர்கள் நிறுவனத்தின் தானியாங்கி மொபைல் எண், ஏஜென்சிஸின் தொடர்பு எண் அல்லது இணையத்தில் பதிவு செய்தால் கேஸ் வீடு தேடிவரும். மாநகரம், நகரங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு வந்து தந்துவிட்டு பணம் வாங்கிச் செல்வார்கள் ஏஜென்ஸியின் டெலிவரி பாய்கள். கிராமப் பகுதியாக இருந்தால் ஊரின் ஒதுக்குபுறமான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு வாடிக்கையாளரை வந்து வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்லி தந்து அனுப்புவார்கள்.
 

 

Delivery


கேஸ் நிறுவனங்களின் சட்ட விதிகளின் படி, ஏஜென்ஸிகள் வாடிக்கையாளரின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று கேஸ் சிலிண்டரை இறக்கி வைத்து அதன் எடையை வாடிக்கையாளருக்கு காட்டிவிட்டு, அதன்பின் அன்றைய மதிப்பில் கேஸ் விலையை வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்கிறது. 99 சதவிதம் அப்படி எந்த கேஸ் ஏஜென்ஸி ஊழியரும் எங்கும் செய்வதில்லை. அதோடு டெலிவரி சார்ஜ் எனத் தனியாக 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூல் செய்வதும் வாடிக்கை. இப்படியொரு தொகையை வசூலிக்கக் கூடாது என நிறுவனங்கள் அறிவித்தும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றியும், மிரட்டியும் வசூலித்துவருகின்றன.


திருவண்ணாமலை மாவட்டத்தில் 20-க்கும் அதிகமான கேஸ் ஏஜென்ஸிகள் உள்ளன. திருவண்ணாமலை நகரத்தில் உள்ள ராஜிவ் கேஸ் ஏஜென்ஸி, லட்சுமி கேஸ் ஏஜென்ஸி, யோகலட்சுமி கேஸ் ஏஜென்ஸி எனச் சில ஏஜென்ஸிகள் உள்ளன. ஊரடங்கு உத்தரவுக்கு பின்பு நிறுவனங்கள் தானியாங்கு கேஸ் பதிவு மொபைல் எண்ணை முடக்கியுள்ளன. இணையம் மற்றும் செல்போன் வழியாகப் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் சம்மந்தப்பட்ட ஏஜென்ஸிகளுக்கு வாடிக்கயைாளர்கள் போன் செய்தாலும் போன்களை யாரும் எடுப்பதில்லை. இதனால் கிராமபுற, நகர்புற வாடிக்கையாளர்கள் இந்த 144 தடையுத்தரவு காலத்தில் காலி சிலிண்டரை எடுத்துக்கொண்டு ஏஜென்ஸிகளுக்கு வருகிறார்கள். அப்படி வரும் இடத்திலும் சமூக இடைவெளியை இந்த நிறுவனங்கள் கடைப்பிடிக்க வைப்பதில்லை. அதோடு, உங்க ஏரியாவுக்கே சிலிண்டர் வண்டிகள் வரும் அங்கே வாங்கிக்குங்க எனத் துரத்துகின்றன. வாரத்துக்கு ஒருமுறை அல்லது 10 தினங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு ஏரியாவுக்கும் செல்லும் சிலிண்டர் வண்டிகள், சிலிண்டரை விற்பனை செய்கின்றன. அங்கு சிலிண்டர் வாங்க தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. 
 

http://onelink.to/nknapp

 

இதுக்குறித்த புகார்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமியின் கவனத்துக்குச் சென்றன. அதனைத் தொடர்ந்து அவர் விதித்துள்ள உத்தரவில், கேஸ் ஏஜென்ஸிகள் நகரம், கிராமம் எதுவாக இருந்தாலும் வாடிக்கையாளரின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்ய வேண்டும். கிராமம் தானே என ஏதாவது ஒரு மூலையில் வைத்து மக்களுக்கு சிலிண்டர் டெலிவரி செய்வதாகத் தகவல் கிடைத்தால் விசாரணை நடத்தி அது உண்மை எனத் தெரியும் பட்சத்தில் அந்த கேஸ் ஏஜென்ஸியின் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஏஜென்ஸியின் லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளார்.


ஊரடங்கால் பொருளாதார ரீதியாக மக்கள் மிகவும் மோசமாக உள்ள நிலையில் இப்போதும் சிலிண்டர் டெலிவரிக்கு "30 ரூபாய் தா, 50 ரூபாய் தா" என கட்டாயப்படுத்தி வாங்குகின்றனர். இதுப்பற்றி சம்மந்தப்பட்ட ஏஜென்ஸியிடம் புகார் சொல்ல போன் செய்தாலும் யாரும் எடுப்பதில்லை, நேரடியாகச் சென்று புகார் கூறினால் நீங்க இருக்கற ஊருக்கே கொண்டு வந்து தர்றோமே அதுக்கான வண்டி வாடகை எனப் பதில் சொல்கின்றனர்.

நிறுவனங்களோ, கேஸ் சிலிண்டர் விலையோடு வண்டி வாடகையும் அடக்கம், பில்லில் உள்ள தொகையை மட்டும் தாருங்கள், ஏஜென்ஸிகள் அதனை மட்டும் வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதனை மீறிச் செயல்படுகிறார்கள். இந்த நேரத்திலாவது இப்படி கூடுதல் தொகை வாங்குவதைத் தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் பொதுமக்களிடம் இருந்து எழுந்துள்ளது.  
 

 

சார்ந்த செய்திகள்