Skip to main content

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை; குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்; களத்தில் நடந்தது என்ன? 

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

Thoothukudi lawyer case; Police catch the criminal; What happened on the field?

 

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர்.

 

கடந்த பிப் 22 அன்று தூத்துக்குடியின் சோரீஸ்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், மதியம் நீதிமன்ற வேலையை முடித்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தனது பைனான்ஸ் நிறுவனத்திற்கு வந்திருக்கிறார். அதே சமயம் அவரை 2 பைக்குகளில் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று அவரைச் சுற்றி வளைத்து வெட்டிக் கொலை செய்தது. இந்தப் படுகொலை தொடர்பாக சிப்காட் காவல்துறையினர் 10க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். காவல்துறையினர் கொடுத்த கடுமையான குடைச்சல் காரணமாக வேல்முருகன், ராஜரத்தினம், இலங்கேஸ்வரன், முத்துராஜ் மற்றும் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷின் சகோதரர் ரமேஷ் உள்ளிட்டோர் மூன்று வெவ்வேறு நீதிமன்றங்களில் சரணடைந்தனர். லட்சுமணப் பெருமாள், நமோ நாராயணன் என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். கோரம்பள்ளம் ஜெயப்பிரகாஷ் என்பவரை மகாராஷ்ட்ரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் காவல்துறையினர் தேடி வந்தனர்.

 

இந்நிலையில் ஜெயப்பிரகாஷ், தூத்துக்குடி அருகேயுள்ள தட்டப்பாறை – மறவன்மடம் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணனுக்கு முக்கியமான க்ளு கிடைத்தது. எஸ்.ஐ. ராஜபிரபு தலைமையிலான எஸ்.பி.யின் தனிப்படையினர் குறிப்பிட்ட பகுதிகளைச் சுற்றி வளைத்தனர். அதே சமயம் ஜெயப்பிரகாஷ் தப்பிப்பதற்காக ஏட்டு சுடலைமணியின் கையை வெட்டியிருக்கிறார். இதனால் பதற்றமான எஸ்.ஐ. ராஜபிரபு தப்பிக்க முற்பட்ட ஜெயப்பிரகரஷை மடக்க முயன்ற போது அவரையும் ஜெயப்பிரகாஷ் அரிவாளால் வெட்டியிருக்கிறார். இதனால் எஸ்.ஐ.க்கு தோள்பட்டை மற்றும் கையிலும் வெட்டு விழவே, சுதாரித்த எஸ்.ஐ. ராஜபிரபு தன்னிடமிருந்த பிஸ்டலால் ஜெயப்பிரகாஷை நோக்கி சுட்டுள்ளார். குண்டு ஜெயப்பிரகாஷின் காலின் மீது பாய்ந்திருக்கிறது. சுருண்டு விழுந்தவரை தனிப்படையினர் மடக்கிப் பிடித்து சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். காயமடைந்த ஏட்டு சுடலை மணியும், எஸ்.ஐ. ராஜபிரபுவும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை எஸ்.பி. பாலாஜி சரவணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

 

எஸ்.பி.யான பாலாஜி சரவணன் இது குறித்து கூறும்போது, “வழக்கறிஞர் முத்துக்குமார் கொலையில் முக்கிய எதிரியான ஜெயப்பிரகாஷ் தட்டப்பாறை பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலால் தனிப்படையினர் அவரைச் சுற்றி வளைத்திருக்கின்றனர். அப்போது அவர் போலீசாரை அரிவளால் வெட்டியிருக்கிறார். அதையடுத்தே தற்காப்பிற்காக போலீசார் அவரை சுட்டனர்” எனக் கூறினார். வழக்கறிஞர் கொலையின் முக்கிய குற்றவாளி துப்பாக்கியால் சுடப்பட்டு வளைக்கப்பட்டது முத்து நகரை பரபரப்பாக்கியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்