புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் போரம் ஊராட்சியில் ராமையா என்பவரின் மகள் சத்தியா என்ற சிறுமி மனநலம் குன்றிய தனது தாயாரையும் வைத்துக் கொண்டு விவசாய கூலி வேலைகளுக்குச் சென்று, குடும்ப பாரத்தை சுமந்து வருகிறார் என்ற தகவலை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்கு கொண்டு சென்றோம். சத்தியாவிற்கு அனைத்து உதவிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என்றார் ஆட்சியர். இந்தச் செய்தி மற்றும் வீடியோக்களை நக்கீரன் இணையத்தில் செப்டம்பர் 3 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை வெளியிட்டிருந்தோம். செய்தியோடு தொடர்பு எண்களையும் வெளியிட்டிருந்தோம். செய்தி வெளியான சில நிமிடங்களில் தொடங்கி ஏராளமான அழைப்புகள் சத்தியாவிற்கு ஆறுதல் சொன்னதோடு உதவியும் செய்ய முன் வந்துள்ளனர். பலர் சத்தியாவின் வங்கிக் கணக்கு எண் கேட்டிருந்தார்கள்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் திடீரென போரம் கிராமத்திற்குச் சென்று சத்தியாவை சந்தித்து உனக்கு உதவிகள் செய்ய நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுத்ததுடன் கையோடு கொண்டு சென்ற புத்தாடைகள், உணவுப் பொருட்கள், காய்கறி, பழங்கள், சிறு பணஉதவி என அனைத்தையும் வழங்கியவர் மன தைரியத்தோடு இத்தனை ஆண்டுகள் உழைத்து மனநலம் பாதிக்கப்பட்ட தாயையும் கவனித்துக் கொண்டு உன் படிப்பையும் தொடர்ந்திருப்பது சிறப்பானது.
உனது கல்லூரி படிப்பு புதுக்கோட்டையிலும் தொடர்ந்து வேலை வாய்ப்பிற்கான பயிற்சி வகுப்புகள் சென்னையிலும் தொடர அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன் என்று சொல்ல.. சத்தியாவால் அதைக் கேட்க முடியாமல் கண்கலங்கி நன்றி சொன்னார்.
நம்மிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், நக்கீரன் செய்தி மற்றும் வீடியோவைப் பார்த்த பிறகு கண் கலங்கியது. அதன்பிறகு என்னால் அலுவலகத்தில் இருக்க முடியவில்லை. இத்தனை தைரியமான சிறுமி யார் என்பதை நேரில் பார்க்க வேண்டும் என்று உடனே கிளம்பி வந்தேன்.
தான் படித்து ஒரு அரசு வேலைக்குப் போக வேண்டும் என்று அந்த மாணவி சொன்னார். உடனே புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இடம் கொடுப்பதாக கூறியுள்ளனர். தொடர்ந்து போட்டித் தேர்வுகள் எழுத எனது சென்னை நண்பரிடம் உதவி கேட்டேன். இப்போதே அதற்கான புத்தகங்களை அனுப்புகிறேன் தொடர்ந்து அந்த மாணவிக்கான கல்வி, தேர்வுக் கட்டணங்களையும் செலுத்துகிறேன். பட்டப்படிப்பு முடிந்ததும் சென்னையில் போட்டித் தேர்வுக்கான பயிற்சியை முழுமையாக கொடுத்து அரசு அலுவலராக ஊருக்கு அனுப்புகிறேன் என்று சொன்னார்.
ஏதோ என்னால் முடிந்த, சிறு உதவி செய்த, நிம்மதியோடு அலுவலகம் திரும்புகிறேன் என்றவர் இப்படி ஒரு தைரியமான சிறுமி படுக்கக் கூட வீடு இல்லாமல் இருக்கிறார் என்ற தகவலை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்த நக்கீரனுக்கு நன்றி என்றார்.
சத்தியாவின் படிப்பிற்காகவும், அரசு வேலைக்கான பயிற்சிக்காகவும் உறுதி அளித்து தைரியம் கொடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் போட்டித் தேர்வுக்கு உதவிகள் செய்ய தயாராக உள்ள எஸ்.பியின் நண்பருக்கும் நக்கீரன் சார்பிலும், சத்தியா சார்பிலும் நன்றி தெரிவித்தோம்.