தூத்துக்குடியில் கொடுத்த கடனை திரும்பக் கேட்டதால் கடன் வாங்கியவர் கூலிப்படையை வைத்து கடன் கொடுத்த நபரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் பல்லாக்குளம் பகுதியில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் நேற்று இரவு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் இருந்தது. அந்த வழியாக வாகனத்தில் சென்ற சிலர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த காரை சோதித்ததில் காரின் டிக்கியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த நாகஜோதி என்பது தெரிய வந்தது. தொழிலதிபரான நாகஜோதியின் மரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது. தொழிலதிபர் நாகஜோதி வெளியூர் செல்லும் போதெல்லாம் மைக்கேல் ராஜ் என்பவரை டிரைவராக உடன் அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். ஒருமுறை அப்படி காரில் அழைத்து சென்றபோது காரை ஒட்டிய மைக்கேல்ராஜ் அடமானம் வைத்த தன்னுடைய நகைகள் ஏலத்துக்கு வர இருப்பதால் 2 லட்சம் ரூபாய் தருமாறு நாகஜோதியிடம உதவி கேட்டுள்ளார். நாகஜோதியும் உதவி செய்துள்ளார். பின்னர் ஒருநாள் கொடுத்த பணத்தை டிரைவர் மைக்கேல்ராஜிடம் நாகஜோதி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி தர முடியாததால் மைக்கேல்ராஜ் நாகஜோதியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
விளாத்திகுளத்தில் தனக்கு வேண்டியவர் எனக்கு இரண்டு லட்சம் தருவதாக கூறியிருக்கிறார். அதை வாங்கி உங்களுடைய கடனை அடைத்து விடுகிறேன் என மைக்கேல் தெரிவித்துள்ளார். அதை நம்பிய நாகஜோதி காலை 8:00 மணி அளவில் சாயல்குடியில் இருந்து காரில் புறப்பட்டார் மைக்கேல் ராஜ் காரை ஓட்டினார். சிறிது தூரம் கார் சென்றபோது வழியில் நின்ற கணபதிராஜன், மாரி, கனி ஆகிய 3 பேர் காரில் ஏறினர். இதனால் பதற்றமடைந்த நாகஜோதி யார் இவர்கள் என மைக்கேல்ராஜிடம் கேட்டுள்ளார். ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக இவர்கள் வந்துள்ளார்கள் என மைக்கேல் ராஜ் சமாளித்துள்ளார்.
தொடர்ந்து கார் சூரங்குடி அருகே உள்ள குமாரசக்கனாரபுரம் அருகே சென்றபோது நான்கு பேரும் சேர்ந்து நாகஜோதியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். நாகஜோதி பணம் கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். தொடர்ந்து காரை வைப்பார் பல்லாக்குளம் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு செலுத்திய மைக்கேல்ராஜ், நாகஜோதியின் உடலை காரின் டிக்கியில் வைத்துள்ளார். அதன் பின்னர் சரக்கு ஆட்டோவில் சென்று பெட்ரோல், விறகு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து காருக்குள் போட்டு காருக்கு தீ வைத்து விட்டு நான்கு பேரும் தப்பி சென்றனர். முக்கிய கொலையாளியான மைக்கேல்ராஜின் செல்போன் சம்பவ இடத்தில் தவறி விழுந்துள்ளது. சம்பவ இடத்தில் செல்போன் கிடைத்ததால் போலீசார் குற்றவாளிகளை இந்த சம்பவத்தில் எளிதாக கைது செய்தனர்.