Skip to main content

'நினைத்து பார்த்தால் உடம்பெல்லாம் இப்பொழுது கூட சிலிர்க்கிறது'-பாமகவிற்கு திருமா பதில்

Published on 15/09/2024 | Edited on 15/09/2024
vck

மது ஒழிப்பு மாநாடு நடத்த விசிக தயாராகி வரும் நிலையில் 'மதுவை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்து கட்சிகளும் கைகோர்த்து நிற்க வேண்டிய நேரம் இது; ஜனநாயக சக்திகள் அனைத்தும் மது ஒழிப்பிற்காக ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் சாதிய மற்றும் மதவாத கட்சிகளுக்கு அதில் இடமில்லை' என திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், ''அவர் கட்சி மட்டும் என்னவாம். பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி. 36 ஆண்டு காலத்தில் ராமதாஸ் ஆறு இட ஒதுக்கீடுகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். எத்தனையோ சாதனைகள் செய்த கட்சியை தொடர்ந்து திருமாவளவன் இழிவு படுத்திக் கொண்டிருக்கிறார். இதனை தவிர்க்க வேண்டும். எங்களாலும் பேச முடியும். அவருடைய கட்சியை பற்றி எங்களாலும் தரக்குறைவாக பேச முடியும். இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மாநாடு நடத்துவது என்றால் நடத்திக் கொண்டு போங்கள்.

nn

மது ஒழிப்பு என்பது எல்லோருடைய விருப்பம் தான். இந்தியாவில் மது ஒழிப்பு மாநாடு, ஆர்ப்பாட்டம், கூட்டம் என யார் நடத்தினாலும் நாங்கள் அதை ஆதரிப்போம். அந்த வகையில் திருமாவளவன் நடத்தும் மாநாட்டை நாங்கள் ஆதரிப்போம். அவ்வளவுதான். இது எங்களுடைய அடிமட்ட கொள்கை. ஆனால் அவர்கள் அந்த கட்சி இந்த கட்சி என்று பேசுவதையெல்லாம் அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். மது ஒழிப்பில் நாங்கள் பி.ஹெச்.டி முடித்துள்ளோம். திருமாவளவன் இப்பொழுது தான் எல்கேஜி வந்திருக்கிறார். அவர் இப்பொழுது தான் தொடங்கி இருக்கிறார்'' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் பாமக அன்புமணி ராமதாஸின் கருத்துக்கு பதிலளித்து பேசினார். அவர் பேசியதாவது, ''பாமகவை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. விமர்சிக்கவும் இல்லை. அவர்கள் எதுவும் செய்யவில்லை என்றும் சொல்லவில்லை. எங்களால் இணைந்து பயணப்பட முடியாத நிலை இருக்கிறது என்பதை சுட்டி காட்டினேன். தேர்தல் அரசியலோடு இணைத்துப் பார்ப்பதால் வரும் சர்ச்சை இது. இதை மக்கள் பிரச்சனையாக பாருங்கள். தேசிய பிரச்சனையாக பாருங்கள்.. சமூக பிரச்சனையாக பாருங்கள்.. எவ்வளவு பெண்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். மரக்காணம் எக்கியார்குப்பத்திற்கு போகின்ற மீனவர் குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்கள் சொல்வதை நினைத்து பார்த்தால் உடம்பெல்லாம் இப்பொழுது கூட சிலிர்க்கிறது. ஒரு அம்மா சொல்கிறார் '10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார்கள். அதில் என்னால் பொட்டு வாங்க முடியுமா பூ வைக்க முடியுமா?' என்று கேட்கிறார். அந்த பணத்தை வைத்து நான் என்ன செய்ய முடியும். வேண்டுமென்றால் பணத்தை திரும்பி வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். இது இயல்பாக வந்த ஸ்டேட்மென்ட். இப்படி சொல்ல வேண்டும் என அவரிடம் யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை.

nn

300 பேருக்கு மேல் இதுபோல் அந்த பகுதியில் விதவையாக இருக்கிறார்கள். கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் சேர்த்தார்கள். அதில் பத்து பேர் மீனவர்கள். நான்கு பேர் தலித்துகள். எட்டு பேர் வேறு மாவட்டங்களில் வந்து குடித்தவர்கள். 10 பேர் மட்டுமல்ல கணக்கெடுத்து பார்த்தால் 300 பேர் அந்த பகுதியில் மட்டும் விதவைகள் இருக்கிறார்கள். இவைஎல்லாம் எவ்வளவு அதிர்ச்சியான தகவல்கள். அதேபோல் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த 69 பேரும் தலித்துக்கள் கிடையாது. அதில் 15 பேர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பத்துக்கு மேற்பட்டோர் எம்பிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் தலித்துகள். அப்பொழுது எல்லா சமூகத்தை சேர்ந்தவர்களும் இதில் பாதிக்கப்படுகிறார்கள். எல்லா கிராமங்களிலும் மதுவிற்கு அடிமையானவர்கள், அதிலிருந்து மீள முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்திற்கும் பாரமாக, ஊருக்கும் பாரமாக, நாட்டுக்கும் பாரமாக இருக்கிறார்கள். இந்நிலையில் தான் ஒரு நூறு சதவீதம் தூய நோக்கத்தோடு இந்த மாநாட்டை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். இதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை என்பதை நாங்கள் மறுபடியும் மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறோம். எல்கேஜி படித்தாலும் சமூகப் பொறுப்புடன் நடக்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும்' என்றார்.

 

சார்ந்த செய்திகள்