டாஸ்மாக் திறப்பில் விதிமீறல் இருக்கக் கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், ஆட்சியர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதன் பிறகு அமைச்சர் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், டாஸ்மாக் கடைகள், பார்கள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்; கடைகள் கூடுதல் நேரம் திறந்து இருக்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்; டாஸ்மாக் கடைகளில் பதிவேடுகளை தினசரி முறையாகப் பராமரிக்க வேண்டும்.
மதுபானங்களின் விற்பனை பட்டியலை டாஸ்மாக் கடையின் முன்புறத்தில் வைக்க வேண்டும்; நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மது வகைகளை விற்கக் கூடாது; கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்றால் அதற்குரிய அபராதத்தை வசூலிக்க வேண்டும்; சட்டவிரோத மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை முதுநிலை மண்டல மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்; கள்ளச்சாராயம், போலி மது விற்கப்படுவதைக் கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.