சென்னை மாநகர காவல் ஆணையரகம் கட்டுப்பாட்டின் கீழ் 155 காவல் நிலையங்கள் இயங்கி வந்தன. சென்னை பெருநகரின் வளர்ச்சியின் காரணமாக, சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் தொழில் புரட்சியின் காரணமாக, குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இதனால் சென்னை மாநகர காவல்துறைக்கு பணிச் சுமை மிகவும் அதிகமாக இருந்து வந்தது.
இது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கான தீர்வாக கடந்த 13 ஆம் தேதி செப்டம்பர் 2021 அன்று சட்டமன்ற கூட்டத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது, சென்னை புறநகர் பகுதியில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் வகையில், தாம்பரம் மற்றும் ஆவடி என இரண்டு காவல்துறை ஆணையரகம் புதிதாக துவங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அறிவித்த மூன்றே மாதங்களில் அதை நடைமுறைப்படுத்தும் வகையில், 2022 ஜனவரி 1 ஆம் தேதி, 20 காவல் நிலையங்களை கொண்ட தாம்பரம் ஆணையரகம் அமைத்து முதல் கமிஷ்னராக கூடுதல் டி.ஜி.பி. ரவி ஐ.பி.எஸ்ஸை நியமித்தார். மேலும் 25 காவல் நிலையங்களை உள்ளடக்கிய ஆவடி காவல் ஆணையரகம் அமைத்து அதன் கமிஷ்னராக கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் ரத்தோர்ராய் ஐ.பி.எஸ்ஸை நியமித்தார்.
தற்போது சென்னை மாநகர காவல் ஆணையரகத்தின் கீழ் 103 காவல் நிலையங்கள் உள்ளடக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்று மாநகர காவல் எல்லையில் பணி செய்து வந்த உதவி ஆய்வாளர்கள் முதல் காவலர் வரை பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் கேட்டிருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கமிஷ்னர் ஐ.ஜி லோகநாதன் ஐ.பி.எஸ். உள்ளடக்கிய மூன்று பேர் சேர்ந்த கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கமிட்டி அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியிடம் மாற்றம் கேட்டிருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த மூன்று மாநகர காவல் எல்லை பிரிக்கும்போது 500க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் கேட்டு மனு செய்திருந்தனர்.
ஆனால், இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி செயல்படாமலே இருந்து வருகிறது. இதனால் பணியிட மாறுதல் கேட்டிருந்த போலீசார் மன அழுத்தத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த சில போலீசார், இந்த பணியிட மாற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி பற்றி முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அதன்படி கடந்த டிசம்பர் மாதம் இது தொடர்பாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியதில் குறைதீர்ப்பு முகாம் அமைத்து மனுக்கள் பெறப்பட்டது. இருந்தபோதிலும் இதுவரை பணியிட மாற்றம் கேட்ட போலீசாருக்கு எந்த பணியிட மாற்றமும் செய்யப்படவில்லை.
இது தொடர்பாக இந்த கமிட்டி தலைவரான சென்னை மாநகர காவல் தலைமையக கூடுதல் போலீஸ் கமிஷ்னரான ஐ.ஜி. லோகநாதன் ஐ.பி.எஸ்.-ஐ ஃபோனில் தொடர்பு கொண்டோம். அவர் தொடர்பை எடுக்கவில்லை. தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவையும் தொடர்பு கொண்டோம் அவரும் பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பியும் பதில் தரவில்லை.
ஐ.ஜி.லோகநாதன் மற்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் இதுகுறித்து பதில் தரும் பட்சத்தில் அதுவும் பதிவேற்றப்படும்.