தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் 89,777 மெட்ரிக் டன் சரக்குகளுடன் கூடிய பெரிய கப்பலை முதன்முறையாக கையாண்டு புதிய சாதனை.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பெரிய அளவிலான கப்பல்கள் வரும் வகையில், மிதவை ஆழம் 16 மீட்டராக உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் முதல்முறையாக எம்.வி.ஜேன்ஜீன் என்ற 14 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய சரக்கு கப்பல் 74 ஆயிரத்து 962 டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு வந்தது. இந்த கப்பலை துறைமுக அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது பேசிய அவர்கள், இது போன்று கப்பல்கள் தொடர்ந்து கையாளப்பட உள்ளது. நிலக்கரி மட்டுமின்றி பிற சரக்குகளும் இறக்குமதி செய்யப்படும் என தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு தளம் ஒன்பதில் 89,777 மெட்ரிக் டன் சரக்குகளுடன் கூடிய பெரிய கப்பலை கையாளப்பட்டது. பனமா நாட்டு கொடியுடன் எம்.வி. என்பிஏவோர் என்ற இக்கப்பல் 234.98 மீட்டர் நீளமும், 38 மீட்டர் அகலமும் மற்றும் 14.16 மீட்டர் மிதவை ஆழம் கொண்டது. இக்கப்பல் அமெரிக்கா நாட்டிலுள்ள பால்டிமோர் என்ற துறைமுகத்திலிருந்து 89,777 டன் நிலக்கரியை இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்காக எடுத்து வந்துள்ளது. கப்பலில் வந்துள்ள மொத்த சரக்குகளும் இன்று (18.9.19) இரவுக்குள் கையாளப்படும் என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது போன்ற வசதிகளால் துறைமுகத்தில் போக்குவரத்து அதிகரிப்பதுடன் குறைந்த செலவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் வாய்ப்பு ஏற்படும். இதைத்தொடர்ந்து ரூ.400 கோடி செலவில் உள்துறைமுகத்தின் ஆழம் 14.5 மீட்டராக ஆழப்படுத்தப்பட உள்ளது. அந்த பணி முடிவடைந்த உடன் துறைமுகத்தின் மிதவை ஆழம் 16 மீட்டராக உயர்த்தும் புதிய திட்டத்திற்கு மதிப்பீடு தயார் செய்யும் பணியை சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் மேற்கொள்ளும் என்றார்.