டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினை ஹவாலா பண மோசடி தொடர்பான புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை நேற்று நள்ளிரவு அதிரடியாகக் கைது செய்தது. கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை, கஸ்டடிக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் ஜூன் 9ம் தேதி வரை அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விளக்கமளித்துள்ளார். அதில் " சத்யேந்திர ஜெயின் மீதான குற்றச்சாட்டுக்களை நான் நேரில் பார்த்தேன். அவை அனைத்தும் பொய், நாங்கள் தேச பக்தர்கள். எங்கள் தலை துண்டிக்கப்பட்டால் கூட ஒருபோதும் நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார். டெல்லியை கடந்து அடுத்தடுத்த மாநிலங்களின் அரசியலிலும் கால் பதிக்க விரும்பும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த சம்பவம் பின்னடைவாக மாறியுள்ளது.