சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பேசுபொருளாகி இருக்கும் நிலையில், பல்வேறு தரப்பினரும் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என சொல்கிறார்கள். சனாதனம் என்பதன் உண்மையான அர்த்தம் என்னவென்று கேட்டால் யாருக்குமே தெரியாது. சனாதனம் என்பதற்கான உண்மை விளக்கத்தை யார் கிட்ட வேண்டுமானாலும் கேளுங்கள் யாருக்கும் தெரியாது. நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. சனாதானத்தை ஒழிப்போம் என்று சொல்லி அதற்கு ஒரு மாநாடு நடத்துகிறார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கிறது.
கொசுவை ஒழித்து விட்டோம், டெங்குவை ஒழித்து விட்டோம் என்று சொல்கிறார் உதயநிதி. அவையெல்லாம் பெரிய விஷயமே அல்ல. அவர்கள் ஒழிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. வறுமையை ஒழிக்க வேண்டும்; லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டும்; குண்டும் குழியுமாக இருக்கின்ற சாலையை ஒழிக்க வேண்டும்; விலைவாசி உயர்வை ஒழிக்க வேண்டும்; அது மட்டுமல்ல டாஸ்மாக் கடைகளில் ஒழிக்க வேண்டும். இப்படி தமிழ்நாட்டில் மக்களுக்காக ஒழிக்க வேண்டிய நிறைய விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது. அதையெல்லாம் செய்து தமிழ்நாட்டை மக்களுக்கான நாடாக, இந்தியாவின் முதன்மை மாநிலமாக கொண்டு வந்தால் கொண்டு வந்தால் வரவேற்கலாம்.
இன்று இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் குறிப்பாக திமுக அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்களே ஒழிய அடுத்த தலைமுறைக்கான அரசியலை நிச்சயம் செய்யவில்லை. அடுத்த தேர்தல் வருவதால் உடனே சனாதனம் என்கிறார்கள். இதனால் யாருக்கு என்ன பலன். நமக்குள்ள ஏதாவது பாகுபாடு இருக்கிறதா? நமக்குள் எந்த பாகுபாடும் இல்லை. எந்த பிரிவினையும் இல்லை. தேர்தல் ஆதாயத்திற்காக இந்த வார்த்தையை பயன்படுத்தி பிரித்தாலும் சூழ்ச்சியை உண்டாக்குவது திமுக. அதுவும் குறிப்பாக உதயநிதி'' என்றார்.