![Theni people gather to see train after 11 years ..! Train service from Theni to Chennai soon!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ecAynFN0R3Y6oyiiAt2F5NhddnFGVk-Aa-vWSxSr0sk/1608179416/sites/default/files/inline-images/th_482.jpg)
தேனியில் இருந்து சென்னை உள்பட பிற மாவட்டங்களுக்கு ரயில் சேவை விரைவில் இயக்குவதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருவதாக ரவீந்திரநாத்குமார் எம்.பி கூறினார்.
மதுரையிலிருந்து போடி அகல ரயில் பாதை திட்டத்தில், மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையிலானப் பணிகள் முடிக்கப்பட்டு ஏற்கனவே சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரையிலான 21 கிலோமீட்டர் தூரம் அகலப் பாதை பணிகள் முடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டியில் இருந்து 4.40 மணிக்கு கிளம்பிய ரயில் ஆண்டிப்பட்டி கணவாய் வரையிலான 11 கிலோமீட்டர் தூரம் 120 கிலோமீட்டர் வேகத்திலும், கணவாய் மலைப்பகுதியில் 4 கிலோமீட்டர் தூரம் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இயக்கப்பட்டது.
11 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ரயிலை காண ஆண்டிப்பட்டி பகுதி மக்கள் ஆயிரக் கணக்கானோர் திரண்டிருந்தனர். சரியாக 5 மணிக்கு ஆண்டிப்பட்டிக்கு வந்த ரயிலை ரவீந்திரநாத்குமார் எம்.பி மலர் தூவி வரவேற்றார்.
![Theni people gather to see train after 11 years ..! Train service from Theni to Chennai soon!](http://image.nakkheeran.in/cdn/farfuture/OZcKEiOQ9qAkRd7NXyiTA4Io1RExer_lU-BRlTKaQ80/1608179444/sites/default/files/inline-images/th-1_84.jpg)
அதன்பின் பத்திரிகையாளரிடம் ரவீந்திரநாத் குமார் எம் பி., “கடந்த பத்து ஆண்டுகளாக ஆமை வேகத்தில் ரயில்வே பணிகள் நடைபெற்றது. நான் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது தேனி மாவட்டத்திற்கு ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி நான் வெற்றி பெற்றதும் பிரதமர் மற்றம் ரயில்வே துறை அமைச்சரை அணுகி கோரிக்கைவிடுத்தேன். அதன்படி போடி, மதுரை அகல ரயில் பாதை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது ஆண்டிப்பட்டி வரையிலான 58 கிலோமீட்டர் தூரம் பணிகள் முழுமையாக முடிவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.
விரைவில் போடி வரையில் பணிகளை முடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு போடி - மதுரை வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும். மேலும் தேனி மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு ரயில் சேவை தொடங்குவது தொடர்பாக முதற்கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.” என்று கூறினார்.
அப்போது ஆண்டிபட்டி, ஜக்கம்பட்டி, முத்தனம்பட்டி, க.விளக்கு, புதூர் உள்பட கிராமங்கலிருந்து வந்த மக்கள், ரவீந்திரநாத்குமாரை பார்த்து, ‘தேர்தலின்போது மீண்டும் ரயில் சேவையை கொண்டு வருவேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். அதுபோலவே ரயிலை கொண்டு வந்துட்டீங், ரொம்ப சந்தோஷம் என்று கூறி ரவிந்திரநாத்குமாரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.