தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அப்ரா பாத்திமா (வயது 8), இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஏழ்மை நிலையில் இருந்த மாணவியின் மருத்துவ சிகிச்சைக்காக பல்வேறு தரப்பினரும் உதவி செய்த நிலையில் தற்போது சிகிச்சை முடிவடைந்த மாணவி வீடு திரும்பி உள்ளார்.
இந்நிலையில் பள்ளி மாணவிக்கு உதவ சேதுபாவாசத்திரம் வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து பள்ளி ஆசிரியர்களிடம் ரூ 1 லட்சத்து 31 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது. இதை பட்டுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், மாணவியின் பெயரில் கணக்கு தொடங்கி நிரந்தர வைப்புத் தொகையாக போடப்பட்டது. மாணவி உயர்கல்விக்காக கல்லூரி செல்லும் போது, வரும் 2029 ஆம் ஆண்டில் முதிர்வு தொகையாக ரூ 2 லட்சத்து 58 ஆயிரத்து 282 கிடைக்கும் வகையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கான வைப்புத் தொகைக்கான பத்திரத்தை வட்டாரக்கல்வி அலுவலர்கள் எம்.கே.ராமமூர்த்தி, சகுந்தலா ஆகியோர் முன்னிலையில், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் செ.முத்தரசன், மாவட்ட பொருளாளர் செ.பாலமுருகன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் ஏ.வி.சந்திரசேகர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வட்டாரச் செயலாளர் சுவாமிநாதன், மாவட்ட துணைச் செயலாளர் ஜோசப் சந்திரன் ஆகியோர் மாணவி மற்றும் அவரது பெற்றோர்களிடம் வீடு தேடிச் சென்று வழங்கினர். இதனைப் பெற்றுக் கொண்ட மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், "மாணவியின் தந்தை வறுமை நிலையில் உள்ளது அறிந்து, மாணவிக்கு உதவ வேண்டும் என முடிவெடுத்தோம். இதில் சேதுபாவாசத்திரம் வட்டார ஆசிரியர்களும் மகிழ்ச்சியோடு உதவ முன்வந்தனர். இதில் வசூலிக்கப்பட்ட தொகை வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக போடப்பட்டது. மாணவி கல்லூரி செல்லும் காலத்தில் உதவும் வகையில் இவ்வாறு திட்டமிடப்பட்டது' என்றனர். ஆசிரியர்-மாணவர்கள் உறவு என்பது அனைத்தையும் விட மேலானது என இந்நிகழ்வு உறுதிப்படுத்தி உள்ளது. ஆசிரியர்களின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.