


இந்தியா சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டை தொட்ட நிலையிலும் இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்லும் பாதைகளைக்கூட அமைத்துக்கொடுக்காத அரசாகவே தமிழக அரசு இருந்துவருகிறது.
மயானத்துக்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாமல் ஆற்று நீரில் இறங்கி, இறந்தவர்களின் உடலை சுமந்து சென்று இறுதிச் சடங்குகள் செய்துவரும் சம்பவம் தஞ்சை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இறப்பு நேரிடும் நேரங்களில் மட்டும் அரசும், அரசு அதிகாரிகளும் செய்துக்கொடுக்கிறோம் என்கிற சப்பைகட்டு காரணத்தைக்கூறி போராட்டத்தில் ஈடுபடும் மக்களை களைத்துவிடுகின்றதே தவிர செய்துகொடுக்க மறுக்கிறது என்பது தான் இறந்தவர்களின் உடலை சுமந்து செல்பவர்களின் கவலையாக இருக்கிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள குமாரமங்கலம், வடக்குவேளி கிராமங்களில் இறந்தவர்களின் உடலை கொண்டுசெல்ல பாலம் இல்லோமல் போனதால் இழுத்து செல்லும் ஆற்று தண்ணீரில் நீந்தியபடியே இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் அவலம் தொடர்ந்து நடக்கிறது. அதேபோல கொற்றவநல்லூரிலும், நாகப்பட்டினத்திலும் அதே அவலம் தொடர்கிறது. அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியிலும் தொடர்கிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள மேலப்பூவனூர், வெள்ளாம்பூவனூர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களது உடலை தகனம் செய்ய, கொண்டியாற்றில் இறங்கி மயானத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியநிலைதான் நீடிக்கிறது. மாற்றுப்பாதை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் அந்த பகுதியில் கோயில் இருப்பதால், இறந்தவர்களின் உடலை அந்த பாதையின் வழியாக கொண்டு செல்லக்கூடாது என்கிற எழுதப்படாத விதியாக இருக்கிறது, அதனால் கொண்டியாறு வழியாகத்தான் எடுத்துச் செல்லவேண்டியுள்ளது.
இந்த நிலையில், மேலப்பூவனூரைச் சேர்ந்த அமிர்தவள்ளி என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை சுமந்தபடி கொண்டியாற்றில் இறங்கி மயானத்துக்கு கொண்டு சென்று, இறுதிச்சடங்குகள் செய்தனர்.
"இந்த இடர்பாடுகளை தவிர்க்க ஆறுகளின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது பாலம் கட்டினால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு மட்டுமன்றி, அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் அப்பாவி பொதுமக்கள்.
எத்தனையோ தேவையில்லாத இடங்களில் கட்டிடம் கட்டுகிறோம் என்கிற பெயரில் அரசு பணத்தை சுருட்டுகின்றனர் ஆளும் அரசியல்வாதிகள், அதில் ஒன்றாக இப்படி பட்ட கிராமங்களில் பாலம் அமைத்துக்கொடுத்தால், இறந்தவர்கள் போகும் போதாவது அவதியில்லாமல் போவார்கள்.