![Tariff hike twice in one year will have serious consequences says Communist Party of India](http://image.nakkheeran.in/cdn/farfuture/RvAM2Vb1IdwhjSyGTPEFS40sGRUy0QiI9N3vn4Vkcn8/1686054695/sites/default/files/inline-images/1003_91.jpg)
ஓராண்டுக்குள் இருமுறை கட்டண உயர்வு செய்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மின் கட்டண உயர்வா? அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு மின்வாரியம் வரும் ஜூலை முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மின்வாரியத்தில் நிலவும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அப்போது ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்படும் என வெளியான செய்தியை அரசு தரப்பில் மறுத்து வந்தனர். ஆனால், இன்று அது உண்மையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஓராண்டுக்குள் இருமுறை கட்டண உயர்வு செய்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு மின்வாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேறு வழிகள் குறித்து ஆராய வேண்டும். குறிப்பாக தனியாரிடம் கொள்முதல் செய்யும் விலை குறைப்பு உள்ளிட்ட வழிகள் குறித்து பரிசீலிக்க வேண்டும். அதனை தவிர்த்து மின்வாரிய கட்டண உயர்வு முன்மொழிவை ஏற்கக் கூடாது; அனுமதிக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.