சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூழையூரில் நீட் நுழைவுத் தேர்வு எழுதவிருந்த மாணவர் தனுஷ் (வயது 19) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இரண்டு முறை தேர்ச்சி பெற முடியாத நிலையில், மூன்றாவது முறையாக தேர்வு எழுதவிருந்த நிலையில் மாணவர் தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ பகுதிக்கு சென்று மாணவரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவர் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் செல்போன் வீடியோ கால் மூலமாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாணவனின் பெற்றோருக்கு கண்ணீர் மல்க ஆதரவு தெரிவித்தார். மாணவனின் வீட்டிற்குச் சென்ற மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் சரத்பாபு, ஏழுமலை உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது மாணவர்களின் பெற்றோருக்கு செல்போனில் வீடியோ காலில் தொடர்பு கொண்ட கமல்ஹாசன், நீட் தேர்வை தடுக்க தவறி விட்டதாக வேதனைப்பட்டார். எப்போதும் தனுசுடைய பெற்றோருக்கு உறுதுணையாக இருப்பேன் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
அப்போது கமல்ஹாசனிடம் பேசிய மாணவனின் தாய், ''அவன் அவசரப்பட்டுடான் சார்... பரீட்சை எழுதுவதற்கு முன்னாடியே...'' என கண்ணீர் மல்க அவரது சோகத்தை வெளிப்படுத்தினார்.