கனடாவில் அடுத்த ஆண்டு அக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பல முனைகளில் இருந்து நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருந்தது. அமெரிக்கா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், கனடாவை அமெரிக்காவுடன் இணைப்போம் என்ற ரீதியில் பேசி ஜஸ்டின் ட்ரூடோவிற்கு சிக்கலை ஏற்படுத்தினார். அதே சமயம், ஜஸ்டின் ட்ரூடோவை பதவியில் இருந்து கவிழ்க்க நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக முக்கிய கூட்டணிக் கட்சி தெரிவித்திருந்தது.
ட்ரூடோ கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், அவரது அரசு மீது வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியிலிருந்தும், லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார். இது தொடர்பாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசுகையில், “லிபரல் கட்சி தனது அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, அக்கட்சித் தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்ய உள்ளேன். நேற்றிரவு லிபரல் கட்சியின் தலைவரிடம் அதற்கான செயல்முறையைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டேன்.
நான் ஒரு போராளி. என் உடலில் உள்ள ஒவ்வொரு எலும்பும் எப்போதும் சண்டையிடச் சொல்லும். ஏனென்றால் நான் கனடா நாட்டு மக்கள் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன். நான் இந்த நாட்டைப் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன். மேலும் கனடா நாட்டு மக்களின் நலனுக்காக நான் எப்போதும் ஊக்கமளிப்பேன். அதைச் செயல்படுத்துவதற்கான சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், கனடாவின் வரலாற்றில் பல மாதங்களாகப் பாராளுமன்றம் முடங்கியது. அதனால்தான் இன்று காலை கவர்னர் ஜெனரலுக்கு நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் வேண்டும் என்று அறிவுறுத்தினேன். அவர் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்” எனப் பேசினார்.