Skip to main content

“வரலாற்றில் இது போன்ற சம்பவம் நடந்ததே இல்லை” - ஜெயக்குமார்

Published on 07/01/2025 | Edited on 07/01/2025
Jayakumar spoke about tamilnadu assembly session

2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று (06-01-25) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடினர். சட்டப்பேரவைக்குள் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் 'யார் அந்த சார்'? என்ற பேஜ் அணிந்து கொண்டு வருகை புரிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அ.தி.மு.க எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பிய நிலையில் அ.தி.மு.க எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல் வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டுச் சென்றார்.

ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. அதில், ‘அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என ஆளுநர் வெளியேறியுள்ளார். தேசிய கீதம் பாட வேண்டும் என முதலமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் ஆளுநர் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால் தேசிய கீதம் பாடப்படவில்லை. தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது’ என ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் விளக்கம் அளித்தது. சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த விளக்கம் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு டேக் செய்யப்பட்டது. பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியதால் அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். தொடர்ந்து அவை தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

ஆளுநர் வெளியேறியது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “வரலாற்றில் இதுவரை ஆளுநர் உரையை சபாநாயகர் படித்த சம்பவம் நிகழ்ந்ததில்லை. மக்கள் பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்ப திமுக அரசு முயற்சி செய்கிறது. தமிழக சட்டமன்றத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. ஆளுநர் வெளியேறுவதற்கு ஏற்றார்போல் திமுக அரசு வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் இந்த திமுக அரசுதான்” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்