கடந்த 2016- ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளில் கடைசி மூன்று சுற்று வாக்குகளும், தபால் வாக்குகளும் மீண்டும் எண்ண உத்தரவிடப்பட்டது. மறுவாக்கு எண்ணிக்கை நாளை காலை 11.30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.ஏ இன்பத்துரை அவசர மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.