கட்சித் தலைவர்களின் சூட்டைக் கிளப்பும் அனல் பிரச்சாரங்கள். காங்கிரஸ், அ.தி.மு.க. தலைவர்களின் தொடர் முற்றுகை என உச்சத்திற்குப் போயிருக்கும். நாங்குநேரியின் வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில்,வரும் சனிக்கிழமை மாலை 05.00 மணியுடன் பிரச்சாரத்திற்கு ஃபுல் ஸ்டாப் வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
இடைத்தேர்தல் என்பதால் நாங்குநேரி குருசேஷத்திர வியூகத்தில் இருக்கிறது. கடந்த எம்.பி. தேர்தலில் இந்தத் தொகுதியில் தி்.மு.க.வின் வேட்பாளர் 34710 வாக்குகள் அதிக வித்தியாசத்திலும், அ.ம.மு.க. 15114 வாக்குகள் பெற்றது என மொத்தம் 49814 வாக்குகள் வித்தியாசத்தில் வாய்ப்பை இழந்து அ.தி.மு.க. அந்த வித்தியாசங்களையும் வீழ்த்தி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. ஆனால், எதிர்பார்ப்பை விட இம்முறை சட்டசபைக்கு காங்கிரசுக்கே வாய்ப்பைக் கொடுத்த தி.மு.க. எதிரியின் வேகத்திற்கு காங்கிரஸால் ஈடுகொடுக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்தால், பெற்ற வெற்றியைத் தக்க வைக்க காங்கிரசை காட்டிலும் தனது போர் வியூகத்தைக் காட்டத் தொடங்கி விட்டது.
வெற்றி ஒன்றே இலக்கு. களத்தில் நிற்பது தி.மு.க. வேட்பாளர் என்ற உணர்வில் தனது கட்சியினரை வேகப்படுத்திய ஸ்டாலின் கூட்டணியான வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் ம.தி.மு.க. ஆகிய கட்சிகளையும் இணைத்தே செயல்பட வைத்திருக்கிறார். தொகுதியின் பல பகுதிகளில் கிளைக் கழகங்களே இல்லாத காங்கிரசுக்கு கூட்டணியின் கூட்டு முயற்சி கிடைத்தது அரிதிலும் அரிதான வாய்ப்பு என்று கதர்ச்சட்டையினரே வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
அதற்கேற்ப வியூகங்களை தி.மு.க.வின் துணை செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆவுடையப்பன் கருப்பசாமிபாண்டியன் அனிதா ராதாகிருஷ்ணன், சுரேஷ்ராஜன், பழனிமாணிக்கம், எம்.பி. மனோ தங்கராஜ், கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் தொகுதி முழுக்க களப்பணிகள் மேற்கொண்டுள்ளன. கூட்டணிக் கட்சியினரை உள்ளடக்கிய பூத் கமிட்டி, வார்டு கண்காணிப்பு கமிட்டி, பட்டியல் சரிபார்ப்பு கமிட்டி என மூன்றாக அமைக்கப்பட்டு தேர்தல் வேலைகளை முன்னெடுக்கும் இவர்களுக்கான செலவுகள் வாடாமல் கவனிக்கப்படுகின்றன.
அ.தி.மு.க. வின் தரப்பிலோ, 10- க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் தங்கமணியின் தலைமையில் அமைச்சர்களான விஜயபாஸ்கர், காமராஜ் வெல்லமண்டி நடராஜன், ராஜலட்சுமி என்று தொகுதியின் பல பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். கூட்டணி கட்சியான பா.ஜ.க. வைக் கண்டு கொள்ளவில்லை. தேர்தல் பணியின் முக்கிய ஆயுதமான பண விவகாரங்கள் அமைச்சர்களுடன் வந்திருப்பவர்களின் பொறுப்பில் விடப்பட்டதால், லோக்கல் கட்சிப் புள்ளிகளை, இதர வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதால் அவர்கள் அதிருப்தியிலிருக்கிறார்கள். தொகுதியில் அறிமுகமான மனோஜ் பாண்டியன், மாவட்ட செயலாளர் பிரபாகரன் போன்றவர்கள் அலட்சியப்படுத்தப்பட்டதால் அவர்கள் விலகியே நிற்கின்றனர்.
இரவு எட்டு மணிக்கு மேல் நாங்குநேரிக்குப் போக்குவரத்து வசதியின்மையால் முடக்கம், குடிநீர் தட்டுப்பாடு மருத்துவ வசதி, வேலை வாய்ப்பின்மையால் புழுங்கும் நாங்குநேரி தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வெளிப்படாத பிரச்சாரமே இலைத் தரப்புத் தலைவர்களி்டமிருக்கிறது. எதிரணித் தலைவரான ஸ்டாலினோ, தி.மு.க. ஆட்சி அமைந்தும் மக்கள் பிரச்சினையைத் தீர்ப்போம் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். விவகாரங்கள், எதிரணியின் வியூகங்களை முறியடிக்க வோட்டுக்குப் வைட்டமின் ”ப” என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கிறது இலைத் தரப்பு. அதேசமயம், கைத்தரப்பும் அதனை எதிர்கொள்ளும் வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பே வாக்காளர்களுக்கான பட்டுவாடாவை முடித்து விட்டது. இலைத்தரப்போ பட்டுவாடாவைத் தொடங்கியிருக்கிறது. பணத்திற்குப் பணம் போட்டியாக இருக்கிறது என்கிறார்கள் தொகுதி வாசிகள். இதனிடையே பிரச்சாரத்திலிருக்கும் பனங்காட்டுப் படை கட்சி வேட்பாளர் கிரிக்கெட் ஆடுகிறார். அனல் பிரச்சாரம், புரளும் ஹாட் கரன்சிகளால் பரபரக்கிறது நாங்குநேரி.