வெங்காயம் விலை உயர்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இதன் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் நாசிக் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு வெங்காயம் வரத்து இருந்து வருகிறது. குறிப்பாக இந்த பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 90 லாரிகளில் பல்லாரி வெங்காயம் வரத்து இருந்த நிலையில், தற்போது வரத்து பாதிக்கு பாதியாக குறைந்துவிட்டது. இதன் காரணமாகவே விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. வெங்காயம் வரத்துக்கு ஏற்றவாறு பல்லாரி வெங்காயம் விற்பனை ஆகிறது.
இந்த நிலையில் திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டிக்கு பெரிய வெங்காயம் 150 டன் இன்று (09.12.2019) வந்தது. இதில் கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து வந்த பெரிய வெங்காயம் மட்டும் மொத்த விற்பனையாக 60 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை விற்கப்பட்டது. எகிப்திலிருந்து வந்த 30 டன் பெரிய வெங்காயம் கிலோ 120 ரூபாய்க்கு மொத்த விற்பனை செய்யப்படுகிறது.
சின்ன வெங்காயம் பெரம்பலூர், துறையூர் மற்றும் நாமக்கல் பகுதியில் இருந்து 75 டன் வந்ததுள்ளது. இதன் விலை 30 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை மொத்த விற்பனையாக சின்ன வெங்காயம் விற்கப்பட்டது.
இந்த வெங்காயம் மிகவும் சிவப்பு கலரில் இருப்பதாலும், இதை பார்த்தவுடன் பொதுமக்கள் வாங்குவதற்கு பயப்படுகிறார்களாம். இதனால் இதனுடைய விற்பனை மந்தமாக உள்ளது என்கிறார்கள் வியாபாரிகள். இதற்கிடையில் குடிமைபொருள் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் என திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதியில் உள்ள வெங்காய மண்டிகளில் என சோதனை செய்தனர். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேலே வெங்காயம் பதுக்கி வைத்திருக்கிறார்களா என்று சோதனை நடத்தி சென்றனர்.