இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 18 வயது மேற்பட்டவர்களுக்கும் இன்று (01/05/2021) முதல் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா, குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று (01/05/2021) தொடங்கியது. இருப்பினும், இந்த ஆறு மாநிலங்களில் குறைந்த அளவு மாவட்டங்களில் மட்டுமே தடுப்பூசிப் போடப்படுகிறது. மற்ற 22 மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிப் போடப்படவில்லை.
குறிப்பாக, தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிப் போடும் பணி தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் 1.5 கோடி கரோனா தடுப்பூசிகளை ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அது எப்போது வரும் என்று தெரியவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்வதாக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்துக்கு சுமார் 7.33 லட்சம் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 5.39 லட்சம் கோவிஷீல்டு, 1.94 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இரண்டு வாரங்களில் தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.