தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2- ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதமாக எத்தனை மேஜைகள் அமைப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் கூறுகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் நாளை (22/04/2021) ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஏழாம் கட்டவாக்குப்பதிவு ஏப்ரல் 26- ஆம் தேதியும், எட்டாம் கட்ட மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29- ஆம் தேதியும் நடைபெறுகிறது. ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தலுடன், கன்னியாகுமரி உள்ளிட்ட மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும், சில சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.