தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், கட்சியை வலுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய விஜய், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்காக ஆயத்தமாகி வருகிறார். மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் த.வெ.க.வின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனையொட்டி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கட்சி தொண்டர்களுக்கு நடிகர் விஜய் நீண்ட அழைப்பு மடல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “நம் கழகம் மற்ற அரசியல் கட்சிகள் போலச் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்க பெரும்படை, இளஞ்சிங்க படை, சிங்க பெண்கள் படை, குடும்பங்கள் இணைந்த கூட்டு பெரும்படை. ஆகவே நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலாம். ஆனால் படையினர் ஓரிடத்தில் கூடினால் அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் அவரது கட்சியை உயர்வாகச் சொல்வதில் தவறில்லை; ஆனால் மற்றக் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் மதிக்க வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌதரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விஜய் தனது மாநாடு அழைப்பு கடிதத்தில் ‘மற்ற கட்சிகளைப் போல் நாம் சாதாரண கட்சி அல்ல’என்று கூறியுள்ளார். எத்தனையோ கட்சிகள் ஆண்ட கட்சிகளாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்றன. உங்கள் கட்சி புதிய கட்சி. உங்கள் கட்சியை உயர்வாகச் சொல்வதில் தவறில்லை; அதே நேரத்தில் மற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் மதிக்க வேண்டும். தற்போது, ஒரு குட்டி திராவிட கட்சியைப் போலத்தான் விஜய்யின் கட்சியும் இருக்கிறது. பெரியாரையும் கும்பிடுகிறார்கள் கடவுளையும் கும்பிடுகிறார்கள். நேரம் காலம் பார்த்துத்தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள் அதாவது தி.மு.க. எதைச் செய்கிறதோ அதே போலத்தான் விஜய்யின் த.வெ.க.வும் செய்கிறது” என்றார்.