Skip to main content

சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற தமிழக வழக்கறிஞர்!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020
Supreme Court Advocate Ram Shankar

 

 

உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்க செயலாளருமான திரு. ராம் சங்கர் சட்டப் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.   

 

தமிழகத்தின் ராஜபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராம் சங்கர் கடந்த 2012 முதல் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் இந்துக்களின் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை நதியை பாதுகாக்கவும், தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றங்களை சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற பெருநகரங்களில் அமைக்க வழி செய்ய வேண்டி உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் வாதாடி பல நல்ல தீர்ப்புகளை பெற்றுள்ளார்.

 

அகில இந்திய பார் கவுன்சிலின் சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிவரும் ராம் சங்கர் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். இவர் சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெறுவதற்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று இந்தியாவில் புகழ்பெற்ற ஜி. டி. கோயங்கா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர ஆராய்ச்சி மாணவராக சேர்ந்து, கடந்த நான்கு ஆண்டுகளாக குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு. சாந்தகுமார் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்படி  "இந்திய  உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் தேர்வு" என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டார். 

 

Supreme Court Advocate Ram Shankar

 

 

அவரது ஆராய்ச்சியில் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் எவ்வாறு, எதன் அடிப்படையில், யார் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது பற்றியும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அதற்கான சிறப்பு அதிகாரங்கள் இருந்தும் அதை இந்திய நீதித்துறை ஏன் பின்பற்றுவதில்லை என்றும், அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாத "கொலிஜியம்" என்ற பெயரில் நீதிபதிகளை தேர்வு செய்து பணியமர்த்துவதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்தும் மற்ற வெளிநாடுகளில் நீதிபதிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது பற்றியும் விரிவாக ஆராய்ந்து பல தகவல்களை தனது  விளக்க உரையில் சமர்ப்பித்திருந்தார்.   

 

ராம் சங்கரின் விளக்கமான விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை பல்கலைக்கழக மானிய குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து ராம் சங்கருக்கு ஜி.டி. கோயங்கா பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. முனைவர் பட்டம் பெற்ற ராம் சங்கரை முன்னாள் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் திரு. செல்லமேஸ்வர், திரு. நாகப்பன், திருமதி. விமலா உள்ளிட்ட நீதிபதிகளும் மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்