2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் அதனையொட்டி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது உள்ளிட்டவை பேசுபொருளாக இருக்கும் நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது.
அதேபோல் முந்தைய காலங்களில் தமிழக அரசு கொடுத்த உரையை ஆளுநர் திருத்தங்கள் செய்து வாசித்தது பேசுபொருளாகி இருந்தது. இதற்காக ஆளுநர் மீது சட்டப்பேரவையிலேயே பல்வேறு எதிர்வினைகளை தமிழக அரசு செய்திருந்தது. இதனால் ஆளுநர் பாதியிலேயே உரையை முடித்துக் கொண்டு சட்டப்பேரவையில் இருந்து கிளம்பிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் உரையை அப்படியே வாசிப்பாரா? உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இன்று கூட இருக்கிறது தமிழகச் சட்டப்பேரவை.
இன்னும் சற்று நேரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடி வருகின்றனர். சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் விவாதப்பொருளாக்க வேண்டிய கூறுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக கேள்வி எழுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல சட்டப்பேரவைக்குள் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் 'யார் அந்த சார்' என்ற பேஜ் அணிந்து கொண்டு வருகை புரிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.