தமிழகத்தில் பொங்கல் திருநாள் தமிழர்கள் மத்தியில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது. இதில் இயற்கையை வணங்கும் விதமாக தை 1-ஆம் தேதியில் சூரிய வழிபாடு, விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும் விவசாயிகளின் திருவிழாவாக ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையில் பன்னீர் கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, பொங்கல் பானை, அறுவடையில் கிடைத்த புது பச்சரிசி உள்ளிட்டவை முக்கிய இடம் பெறுகிறது. இந்நிலையில் பொங்கலுக்கு தமிழக அரசு ரேசன் கார்டுகளுக்கு ஒரு கிலோ அரிசி, சக்கரை, பன்னீர் கரும்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ரூ 1000 பணத்தை, நிதி நிலமையை காரணம் காட்டி இந்த ஆண்டு வழங்கவில்லை. இதனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் அரசு கூட்டுறவு துறைமூலம் ஒரு பன்னீர் கரும்பு ரூ 35 என விவசாயிகளிடம் நேரிடையாக இடைத்தரகர் இல்லாமல் கொள்முதல் செய்யவேண்டும் என்று அறிவித்துள்ளது.
பொங்கலுக்காக சிதம்பரம் அருகேயுள்ள பழைய நல்லூர், கடவாச்சேரி, சாலியந்தோப்பு, பிள்ளைமுத்தாசாவடி, அகரநல்லூர், வேளக்குடி, சேத்தியாதோப்பு, வாழக்கொல்லை, வீராணம் ஏரியின் படுகை, நடுவீரப்பட்டு, பாலூர், குறிஞ்சிபாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் பன்னீர் கரும்பு பயிரிட்டு சாகுபடிக்கு விவசாயிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
ஆனால் சிதம்பரம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேளாண் மற்றும் கூட்டுறவு துறை அலுவர்கள் சம்பந்தப்பட்ட நிலங்களுக்கு வந்து திமுகவினர் கை காட்டும் விவசாயிகளின் நிலங்களில் உள்ள கரும்பை மட்டும் கொள்முதல் செய்கிறார்கள். அரசு ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு கரும்பை கொள்முதல் செய்யும் எனப் பல விவசாயிகள் கரும்பு பயிரிட்டவர்களிடம் கரும்பு வாங்க மறுக்கிறார்கள் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வல்லம்படுகை கிராமத்தை சேர்ந்த கரும்பு விவசாயி கணேசன் கூறுகையில், “நான் அரை ஏக்கரில் ரூ 1.50 லட்சம் செலவு செய்து பன்னீர் கரும்பு விலைவைத்துள்ளேன். இதற்காக ஒரு வருடம் எனது உழைப்பை செலுத்தியுள்ளேன். எனது வயலில் 6 அடி முதல் 8 அடிவரை கரும்பு வளர்ந்துள்ளது.
இதனைத் தவிர்த்துவிட்டு கரும்பு கொள்முதல் செய்யும் அரசு அலுவலர்கள் சில சுய லாபத்திற்கும், ஆளும் கட்சியினர் கைகாட்டும் நிலங்களில் மட்டும் கொள்முதல் செய்கிறார்கள். இதேபோல் பல விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது மிகவும் வேதனையளிக்கிறது. பன்னீர் கரும்பு கொள்முதலில் பாரபட்சம் காட்டாமல் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக்கூறினார்.