Skip to main content

'மொட்டையடித்து அவமரியாதை; இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது'- ராமதாஸ் கண்டனம்

Published on 15/09/2024 | Edited on 15/09/2024
'Tamil fishermen are shaved and disrespected; Don't have fun any more'- Ramdoss condemned

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களில் பலருக்கு இலங்கை அரசு மொட்டையடித்து கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்ததாக தகவல்கள் வெளியான நிலையில் இதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ராமேசுவரத்தில் இருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டு, பின்னர் தண்டத்துடன் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள்  5 பேரை சிங்கள அரசு மொட்டையடித்தும், கைவிலங்கிட்டும், இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கழிவறைகளையும், கழிவுநீர் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வைத்தும் கொடுமைப் படுத்தியுள்ளது. சிங்கள அரசின் இந்த மனிதத் தன்மையற்ற செயல்  கடுமையாக கண்டிக்கத்தக்கது.

வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ஆம் நாள் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களில் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பேரும் தலா ரூ.50 ஆயிரம் தண்டத்துடன் விடுதலை செய்யப்பட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் அவர்களின் குடும்பத்தினர் கடந்த 7-ஆம் தேதி தண்டத் தொகையை கட்டியுள்ளனர். ஆனால், கடந்த 6-ஆம் தேதியே தண்டம் செலுத்தவில்லை என்று கூறி தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு இந்த கொடுமையையும், அவமதிப்பையும் இழைத்துள்ளது. இதை மன்னிக்க முடியாது.

நீதிமன்றம் விதித்த தண்டத்தை செலுத்த மீனவர்களுக்கு காலக்கெடு உள்ளது. ஒருவேளை அந்தக் காலக்கெடுவுக்குள் மீனவர்கள் தண்டத்தை செலுத்தாவிட்டால், அதை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தான் சிங்கள அரசு செயல்பட்டிருக்க வேண்டும். மாறாக, மீனவர்களை மொட்டையடித்து, கழிப்பறைகளை சுத்தம் செய்யும் தண்டனையை வழங்கும் அதிகாரத்தை சிங்கள அரசுக்கு எந்த பன்னாட்டு அமைப்பு வழங்கியது?

'Tamil fishermen are shaved and disrespected; Don't have fun any more'- Ramdoss condemned

இலங்கை சிறைச்சாலையில் நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மட்டும் நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு அல்ல. மாறாக, இந்தியாவின் இறையாண்மைக்கு நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு ஆகும். இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. உலகின் வேறு ஏதேனும் நாடுகளில் இந்தியாவின் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இத்தகைய அவமதிப்பு நிகழ்த்தப்பட்டிருந்தால் இந்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்குமா?

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்க தமிழக அரசும் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன்  மு.க.ஸ்டாலின் கடமையை முடித்துக் கொள்கிறார். இது போதுமானதல்ல. தமிழக மீனவர்களை அவமதித்த இலங்கை அரசை இந்தியா கடுமையாக கண்டிப்பதுடன், பன்னாட்டு சட்டப்படி நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இந்த சிக்கலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அமைச்சர்கள் குழுவை அனுப்பி, பிரதமர் அவர்களை சந்திக்கச் செய்து இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்