![Suspicious vehicle at the counting center' - Trichy East](http://image.nakkheeran.in/cdn/farfuture/Zeo2d-dD7K5g-y1ANYSEfjEwS7Yebkr5hGSXwNOfTRA/1618933662/sites/default/files/inline-images/trutut.jpg)
கடந்த மாதம் மார்ச் 6 ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு இயந்திரங்கள் 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாடு அறையில் வைக்கப்பட்டு மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. திருச்சியில் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திருச்சி கிழக்கு மற்றும் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப் பெட்டிகளை கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் 24 மணி நேரமும் அரசியல் கட்சி முகவர்களும், காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரும் கண்காணித்து வருகின்றனர். வரும் 2ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்குத் தேவையான கூடுதல் கண்காணிப்பு கேமராவும், காட்சிகளைப் பார்வையிடத் தேவையான எல்.சி.டி டிவியும் பொருத்துவதற்கான பணியில் பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் அனுமதி அட்டை இல்லாமல் சிசிடிவி மற்றும் அதற்கான துணைப் பொருள்களுடன் தனியார் நிறுவன மினி வேனில் வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் மையத்திற்குள் கொண்டு சென்றனர்.
இதனைக் கண்ட எதிர்க்கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொருள்களுடன் வந்த மினி வேனை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் வேதரத்தினம் வாக்கு மையத்திற்கு வந்து இதுகுறித்து வேனில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வந்து வாக்கு எண்ணும் மையத்திற்குச் சென்று பார்வையிட்டுவிட்டு பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ''ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சந்தேகப்படும் வகையில் வாகனம், அனுமதியின்றி வந்துள்ளது. இதில், எல்.இ.டி டிவி, கணினி உள்ளிட்டவை உள்ளன. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. இதற்கு முன்பும் சந்தேகப்படும் வகையில், லாரி ஒன்றும் வந்துள்ளது. எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இப்போது முறைகேடுகள் நடக்கிறதோ என எண்ணம் தோன்றுகிறது. மேலும், சந்தேகத்திற்கிடமான வாகனம் உள்ளே வந்தது முதல் பதிவு செய்த காட்சிகளைக் காண வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்தார்.