பொங்கல் தொகுப்பில் விவசாயிகள் எதிர்பார்ப்பதைபோல் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
நாகை மாவட்டம் கீழவெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய விவசாயி கூலித் தொழிலாளர்கள், பெண்கள் உட்பட 44 பேர் ஒரே குடிசையில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் 'கீழவெண்மணி படுகொலை' என்று இன்றளவும் நினைவுகூரப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வின் 54 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கீழவெண்மணியில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ''அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை உடன் செங்கரும்பையும் சேர்க்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு கண்டிப்பாக எடுக்க வேண்டும். நாங்கள் பலமுறை தமிழக அரசை வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம். மின்சார கட்டணம் உள்ளிட்டவற்றை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். ஒன்று ஆர்.என்.ரவி ஆளுநராக இருக்க வேண்டும், அல்லது ஆர்எஸ்எஸ்காரராக இருக்க வேண்டும். ஆர்எஸ்எஸ்காரராக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணியை மேற்கொள்ள வேண்டும் என இந்த நேரத்தில் நான் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.