
ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் உதவி ஓட்டுநர் காலி பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கணினி வழித் தேர்வுக்கு, முதற்கட்ட கட்ட கணினி வழித் தேர்வில் தமிழகத்தில் இருந்து சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுப் பெற்றனர். இவர்களுக்கு நாளை மறுதினம் (19.03.2025) 2ஆம் கட்ட கணினி வழித் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் பெரும்பாலான தேர்வர்களுக்கு இதற்கான தேர்வு மையங்கள் தமிழகத்திற்கு வெளியே அறிவிக்கப்பட்டது.
இதனால் தேர்வர்கள் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை கடந்து தெலுங்கானா வரை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் தேர்வர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் மதுரை நாடாளுமன்றத் தொகுதியைச் சார்ந்த பல தேர்வர்களின் பெற்றோர் சு. வெங்கடேசன் எம்.பி.யை அணுகி தேர்வு மையங்களைத் தமிழகத்திற்குள் மாற்றித் தருவதற்குத் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அவரும் தேர்வு மையங்களை மாற்றுவதற்கு உடனடியாக தலையிடுமாறு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் ஒரே அமர்வில் (shift) எல்லா தேர்வர்களுக்கும் தேர்வு நடத்த வேண்டியிருப்பதால் தேர்வு மையங்களை மாற்ற முடியாது என ரயில்வே தேர்வு வாரிய தலைவர் பிரதீபா பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இரயில்வே தேர்வுக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமான உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என ரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையதல்ல. தேர்வுக்கு மையங்களை கண்டறிய வழியற்ற ஒன்றிய அரசு மும்மொழி திட்டத்துக்கு மூச்சு முட்ட கத்துகிறது.
ரயில்வே தேர்வு வாரியத்தின் தலைவர் பிரதிபா யாதவ், நான் 2ஆம் கட்ட கணினி வழித் தேர்வு மையங்கள் வெளி மாநிலத்தில் போடப்பட்டு இருப்பது பற்றிய எனது கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார். ஒரே அமர்வில் எல்லா தேர்வர்களுக்கும் தேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளதாலும், அதே தேதியில் ரயில்வே தேர்வு வாரியத்தின் வேறு ஒரு தேர்வை நடத்தி வேண்டி இருப்பதாலும் 2 ஆம் கட்ட கணினி வழித் தேர்வுக்கான தேர்வர்கள் அனைவரையும் தமிழ்நாட்டு மையங்களில் மட்டும் பொருத்த முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதோ, ஒரு தேதி சரிப்பட்டு வராவிட்டால் இன்னொரு தேதியை தேட முடியாது என்பதோ சமாதானம் செய்யும் பதில்களா?.
இப்படி தமிழ்நாடு தேர்வர்கள் வெளி மாநிலங்களுக்கு பந்தாடப்படுவதை ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் தொடர்ந்து செய்து வருவதை நானே எத்தனையோ முறை எழுப்பியுள்ளேன். உண்மையான அக்கறை இருந்தால் எளிதில் தீர்வுகாணப்பட வேண்டிய ஒரு செயலை அக்கறை இன்றி அணுகி ஆயிரக்கணக்கான மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.