Skip to main content

காய்ச்சல்னு சிகிச்சைக்கு போன இளைஞருக்கு நேர்ந்த சோகம்... உண்மை தெரியனும்... உறவினர்கள் கதறல்

Published on 09/11/2019 | Edited on 09/11/2019

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்த அய்யாமணி மகன் லோகேஸ்வரன் (வயது 20). தனியார் பாலிடெக்னிக் மாணவன். கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு மெடிக்கல்களில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு குணமடையவில்லை.  அதனால் அவரது நண்பர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் பரிசோதனைகள் செய்யப்பட்ட போது செல்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது தெரிய வந்தது. அதனால் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சனிக்கிழமை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் பல மணி நேரத்திற்கு பிறகு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு குளுக்கோஸ் ஏற்றப்பட்ட போது திடீரென இடயத்துடிப்பு வேகமாக இருந்துள்ளது. சிறிது நேரத்தில் மூக்கு, வாயில் ரத்தம் வர மாணவன் லோகேஸ்வரன் இறந்துவிட்டான்.

 

pudukottai

 

அவசரமாக அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் பெற்றோரை அழைத்து.. பையனுக்கு இதயம் வெடித்து இறந்துவிட்டான். அதான் ரத்தம் வந்திருக்கு. உடனே பாடிய தூக்கிட்டு போயிருங்க. இங்க வச்சிருந்தா பிரேதப்பரிசோதனை செஞ்சு உடலை சிதைத்து கொடுப்பாங்க என்று சொல்ல அறியாமையில் இருந்த பெற்றோர் இறந்த தன் மகன் உடலை முழுமையாக கொண்டு போனால் சரி என்று நினைத்தனர். பெற்றோர்களிடம் பேசிய மருத்துவமனை ஊழியர்களே அமரர் ஊர்தியையும் கொண்டு வந்து நிறுத்த அதில் ஏற்றி அனுப்பி வைத்தனர். லோகேஸ்வரனின் நண்பர்கள் அங்கு சென்ற போது சடலம் அமரர் ஊர்த்திக்குள் இருந்தது. எப்படி இறந்தான் என்று கேட்டால் பதில் சொல்ல யாரும் இல்லை.

வீட்டுக்கு கொண்டு வந்து இரவிலேயே அடக்கமும் செய்துவிட்டனர். ஆனால் அதன் பிறகு வெளியூர்களில் இருந்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் காய்ச்சல்னு சிகிச்சைக்கு போனவன் எப்படி இதயம் வெடிச்சதா சொல்றாங்க. அப்ப வேறு ஏதாவது நோய் தாக்கி இருந்ததா? அரசு மருத்துவக்கல்லூரியில் இறந்த மாணவனை ஏன் பிரேதப் பரிசோதனை செய்யாமல் இறப்புக்காண காரணம் தெரிந்து கொள்ளாமல் அவசரமாக அமரர் ஊர்தில் ஏற்றி அனுப்பினார்கள். இதில் என்ன மர்மம் இருக்கிறது? என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்.

 

pudukottai

 

மருத்துவமனை வட்டாரம் மாணவன் இறப்பிற்கான சரியான காரணத்தை சொல்ல வேண்டும். மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து அதிகாரிகளை சந்திப்பது என்றும், சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்து முடிவெடுப்பது என்றும் கூறுகின்றனர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொருவர் நம்மிடம்.. போன வாரம் என் குழந்தைக்கு காய்ச்சல்னு திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனேன். எந்த பாதிப்பும் இல்லைன்னு பல நாள் மருத்துவம் பார்த்தும் குணமாகல. டெஸ்ட் எல்லாம் எடுத்தாங்க. காய்ச்சல் குணமாகலன்னு காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போனால் டெங்கு பாதிப்புன்னு டெஸ்ட் ரிசல்ட் வந்தது. அதன் பிறகு ரூ. 40 ஆயிரம் செலவு செஞ்சு குழந்தைக்கு சிகிச்சை கொடுத்து அழைத்து வந்தேன் என்றார்.

சுகாதாரத்துறை அமைச்சரின் மாவட்டத்தில் இப்படியா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. உறவினர்களின் சந்தேகத்தை மருத்துவக்குழுவினர் போக்கினால் நல்லது.

 

 

சார்ந்த செய்திகள்