!['Storm' forming again-Alert for Tamil, Andhra](http://image.nakkheeran.in/cdn/farfuture/iWawZ2sf6PhHbo9bP5l2_erhanUFjKljURlZPB7QzAQ/1701172292/sites/default/files/inline-images/a3477.jpg)
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைவதற்கு தாமதமாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தொடர்ந்து இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், பெரம்பலூர், திண்டுக்கல், தஞ்சாவூர், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.