நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. நாட்டில் உள்ள முக்கியமான பொது இடங்கள், விமான நிலையங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அரசு சார்பில் சுதந்திர தின விழாவிற்கான ஒத்திகைகள் நடந்து முடிந்துள்ளது .
தமிழக ஆளுநர் சார்பில் தேநீர் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். நீட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஆளுநர் பொறுப்பின்றி பேசுவதாக கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர், பேரவையில் நிறைவேற்றிய சட்ட முன்வடிவுகளுக்கு அனுமதி தராமல் கிடப்பில் வைத்துள்ள ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து அவர் நடத்தும் தேநீர் விருத்தில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேநீர் விருந்து நிகழ்வை ஆளுநர் மாளிகை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 'தொடர் மழை காரணமாக தேநீர் விருந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் தேநீர் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. விருந்தினர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவே தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேநீர் விருந்து நடைபெறும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.