திருச்சி மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 65வது வார்டு அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து வார்டுகளிலும் பணி நடக்க வேண்டும். பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள டெண்டர்கள் வெளிப்படையாக இல்லாததால் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இனிவரும் காலங்களில் வெளிப்படையாக நடத்த வேண்டும். தெற்கு தேய்கிறது வடக்கு வளர்கிறது..” என்று அவர் பேசத் தொடங்கியவுடன், திமுக கவுன்சிலர்கள் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டனர்.
மீண்டும் அம்பிகாபதி பேசும்போது, “மேற்குத் தொகுதியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குகிறீர்கள்” என்று குற்றம் சாட்டினார். இதற்கும் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மேயர் அன்பழகன் பேசும்போது, “யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்துக்கொண்டு இங்கு பேசாதீர்கள்” என்று கண்டித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் மூன்று பேரும் வெளிநடப்பு செய்தனர்.
கூட்டத்தின் இறுதியில் பேசிய மேயர் அன்பழகன், “24 மணி நேரமும் குடிதண்ணீர் சப்ளை செய்யும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளது. நமது மாநகராட்சி பட்ஜெட் குறித்து அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சியில் திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தான் பெஸ்ட் என்று கூறுகின்றனர்.
திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், சாலைகள் குறித்து என்னிடம் கேட்டறிந்தார். நமது மாநகராட்சியை முதல்வர் கண்காணிக்கிறார். நமது மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தை முதல்வர் வாங்கிச் சென்றுள்ளார். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்சி மாநகரில் வர்த்தக மையம் அமைய உள்ளது.
திருச்சி மாநகராட்சி விரைவில் விரிவுப்படுத்தப்பட உள்ளது. கவுன்சிலர்கள் நிதியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் உள்ள வாய்க்கால்கள் திறந்த நிலையில் உள்ளன. சென்னையில் உள்ளது போல், மேற்புறம் கான்கிரீட் தளம் அமைத்து கொட்டப்படுவது உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் இந்த வருடமே நிறைவேற்றப்படும். கவுன்சிலர் அனைவருக்கும் ஐடி கார்டு விரைவில் வழங்கப்படும்” என்று அவர் பேசினார்.