நவீன தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி செல்போன் அலைக்கற்றையைத் திருடிய கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேர் தேனியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிஎஸ்என்எல் அலைக்கற்றையைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி சிலர் வெளிநாடுகளுக்கு பேசி வருவதாக, தேனி நகர் காவல் நிலையத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் இளைநிலைத் தொடர்பு அலுவலர் முனியாண்டி என்பவர் புகார் அளித்தார்.
அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்தனர். இவர்கள் தேனி மாவட்டம், அல்லிநகரம் மற்றும் ஆண்டிப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் பிஎஸ்என்எல் அலைக்கற்றையைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, வெளிநாடுகளுக்கு பேசியுள்ளனர்.
மூன்று மாதங்களாக வெளிநாடுகளுக்கு பேசி வந்தது தெரிய வந்துள்ளது. கைதானவர்களிடம் இருந்து 1,000 சிம்கார்டுகளும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்நுட்பக் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாத கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? எதற்காக அலைக்கற்றைத் திருட்டில் ஈடுபட்டார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.